Published : 06 Apr 2022 06:16 AM
Last Updated : 06 Apr 2022 06:16 AM
உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியினர் சிவப்பு நிறத் தொப்பிகளை அணிந்து தங்களுக்கு எனஓர் அடையாளத்தை ஏற்படுத்தி உள்ளனர். இதுபோல் பாஜகவினரும் குஜராத் தேர்தல் பிரச்சாரம் முதல் காவி நிறத் தொப்பி அணிய முடிவு செய்யப்பட்டுள்ளது.
முக்கிய நிகழ்ச்சிகளில் பல்வேறுநிற தலைப்பாகை அணியும் வழக்கம் பாஜக தலைவர்கள் மத்தியில் உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, செங்கோட்டையில் சுதந்திர உரையின் போதும் இவ்வாறு தலைப்பாகை அணிந்துள்ளார்.
இந்நிலையில் எதிர்வரும் குஜராத் தேர்தலையொட்டி பிரச்சாரத்தை முன்கூட்டியே தொடங்கும் வகையில் அகமதாபாத்தில் பிரதமர் மோடி அண்மையில் ஊர்வலம் நடத்தினார். அதில் பிரதமர் மோடி தலைப்பாகைக்கு பதிலாக காவி நிறத் தொப்பி அணிந்திருந்தார். இதையடுத்து குஜராத்தில் பிரச்சாரம் செய்யும் பாஜகவினர் காவி நிறத் தொப்பி அணிவது என்ற யோசனை அக்கட்சிக்கு உருவாகி விட்டதாகத் தெரிகிறது.
இந்நிலையில் பாஜக தலைவர்கள் முதல், எம்.பி., எம்எல்ஏ மற்றும் தொண்டர்கள் வரை அனைவரும் காவி நிறத் தொப்பி அணிய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ஒரே வடிவில், சிறப்பு வகை காவித்தொப்பி தயாராகி வருகிறது. கட்சியின் சின்னமாக தாமரை முத்திரையுடன் கூடிய இந்தத் தொப்பி இனிபாஜகவினரின் அடையாளமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல்கட்டமாக இதை பாஜக எம்.பி.க்கள் அணிய உள்ளனர். இதற்காக கட்சித் தலைமை அவர்களுக்கு 5 தொப்பிகள் உள்ளிட்ட சில பொருட்களுடன் ஒரு பைஅளிக்க உள்ளது. பிறகு படிப்படியாக கட்சி நிர்வாகிகளும் இதனை அணியவுள்ளதாக கூறப்படுகிறது.
சுதந்திரத்திற்கு முன்பிருந்தே பாஜகவின் தாய் அமைப்பான ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் அமைப்பினர் காவி நிறக் குல்லா அணிவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். இப்போது கூட அதன் கூட்டங்கள் மற்றும் ஷாக்கா எனப்படும் உடற்பயிற்சி முகாம்களிலும் அவர்கள் தொப்பி அணிகின்றனர். இதுவே தற்போது குஜராத் எம்.பி. ஒருவரின் யோசனையால் சில மாற்றங்களுடன் பொதுமக்களையும் கவரும் வகையில் அறிமுகமாகிறது.
சுதந்திரப் போராட்டக் காலங்களில் காங்கிரஸ் தொண்டர்கள் வெள்ளை நிறத் தொப்பி அணிவது வழக்கமாக இருந்தது. சுதந்திரத்திற்கு பிறகும் ஜவஹர்லால்நேரு உள்ளிட்ட பெருந்தலைவர்களும் வெள்ளை நிறத் தொப்பி அணிந்தனர். பிறகு இந்த வழக்கம் காங்கிரஸாரிடம் குறைந்துவிட்டது. தற்போது ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கட்சியின் முக்கிய சில நிகழ்ச்சிகளில் மட்டும் வெண்ணிற தொப்பி அணிகின்றனர்.
இந்நிலையில் பிப்ரவரி – மார்ச்சில் நடைபெற்ற உ.பி. தேர்தலில் சமாஜ்வாதி கட்சியினரின் சிவப்பு நிறத் தொப்பி மிகவும் பிரபலமானது. அனைத்து கூட்டங்களிலும் முலாயம் சிங் யாதவ்,அகிலேஷ் சிங் யாதவ் உள்ளிட்டதலைவர்களும் இதனை அணிந்திருந்தனர். இந்த தொப்பிகளை அடையாளமாகக் கொண்ட சமாஜ்வாதியினரை பாஜகவினர் செய்த விமர்சனங்கள் எதிர்வினையானது.
“சிவப்புத் தொப்பி உ.பி.க்குஆபத்தானது, குண்டர்கள் தான்சிவப்புத் தொப்பி அணிகிறார்கள்” என்பது போன்ற விமர்சனங்களை பாஜகவினர் முன்வைத்தனர். இவை உ.பி. தேர்தல் பிரச்சாரத்தின்போது சமூக வலைதளங்களிலும் வைரலாகின. இதை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திய சமாஜ்வாதியினர், சிவப்புத் தொப்பிகளை பொது இடங்களிலும் தவறாமல் அணியத் தொடங்கினர். சமாஜ்வாதி, பாஜகவை தொடர்ந்து பிற கட்சிகளும் தொப்பியை தங்கள் அடையாளமாக்கும் வாய்ப்புகள் உள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT