Published : 05 Apr 2022 08:31 AM
Last Updated : 05 Apr 2022 08:31 AM
புதுடெல்லி: பாஜக ஆட்சியில் அதிக அந்நியமுதலீடுகளை இந்தியா ஈர்க்கிறது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் மக்களவையில் நேற்று பேசும்போது, "கடந்த 6 மாதங்களில் அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் (எப்ஐஐ), அந்நிய முதலீடு (எப்டிஐ) தொடர்ந்து சரிவை சந்தித்து வருவது ஏன்? சுமார் ரூ.1,14,866 கோடி அந்நிய முதலீடு திரும்ப பெறப்பட்டு உள்ளது.
இதேபோல பங்குகளில் இருந்து ரூ.48,268 கோடி அந்நியமுதலீடு திரும்ப பெறப்பட்டிருக் கிறது. இதற்கு என்ன காரணம்"என்று கேள்வி எழுப்பினார். அவரின் கேள்விக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளித்தார். அமைச்சர் கூறியதாவது:
எப்ஐஐ, எப்டிஐ முதலீடுகள் வரலாம், போகலாம். இந்தஇழப்பை இந்திய முதலீட்டாளர் கள் ஈடுகட்டி விடுகிறார்கள். இந்திய சிறு முதலீட்டாளர்கள் இந்திய சந்தையில் அதிக முதலீடு செய்கின்றனர். வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்கள் பங்குகளை விற்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறைவாகவே உள்ளது. உள்நாட்டு முதலீட்டாளர்களின் முதிர்ச்சியால் முதலீடு குவிந்து வருகிறது. இந்திய சிறுமுதலீட்டாளர்களை நாடாளுமன்றம் பாராட்ட வேண்டும்.
அந்நிய முதலீடு 65 சதவீதம்
பாஜக ஆட்சியில் அதிக அந்நிய முதலீடுகளை இந்தியா ஈர்க்கிறது. கடந்த காங்கிரஸ் ஆட்சியின் 10 ஆண்டு காலத்தை ஒப்பிடும்போது கடந்த 7 ஆண்டு கால பாஜக ஆட்சியில் அந்நிய முதலீடு 65 சதவீதம் அதிகமாக உள்ளது. கரோனா காலத்திலும் இந்தியா அதிக அந்நிய முதலீடுகளை ஈர்க்கிறது.
இவ்வாறு அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
- பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT