Published : 05 Apr 2022 08:40 AM
Last Updated : 05 Apr 2022 08:40 AM
புதுடெல்லி: சீன செயலி (ஆப்) மூலம் கடன் தருவதில் கோடிக் கணக்கில் மோசடி நிகழ்ந்துள்ளது. இது தொடர்பாக ஒரு பெண் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக நாடு முழுவதும் சோதனை நடைபெற்றுள்ளது.
இந்த மோசடியில் சீனாவைச் சேர்ந்த ஒருவர் மூளையாக செயல்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுதவிர மூன்று சீனர்கள் வெவ்வேறு நாடுகளிலிருந்து செயல்பட்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த நிதி மோசடி சீனா, ஹாங்காங், துபாய் மூலமாக செயல்பட்டுள்ளது. கிரிப்டோ கரன்சி மூலம் அந்நியச் செலாவணி மோசடி நிகழ்ந்துள்ளது தெரியவந்துள்ளது. இவர்களிடமிருந்து ரூ.8.25 கோடி மிரட்டல் பணம் மீட்கப்பட்டுள்ளது. இந்த மோசடி 25 வங்கிக் கணக்குகள் மூலம் செயல்படுத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ரொக்கம், அவர்கள் பயன்படுத்திய எஸ்யுவிகார், லேப்டாப், அதிக எண்ணிக்கையிலான டெபிட் கார்டுகள், வங்கி பாஸ் புத்தகம் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளன.
டெல்லி துணை ஆணையர் ரமன் லம்பா தலைமையில் ஒருவாரத்துக்கும் மேலாக நடத்தப்பட்ட விசாரணையில் டெல்லி, ஹரியாணா, ராஜஸ்தான் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சந்தேகத்துக்கிட மான நபர்களை கைது செய்தனர். இத்தகைய மோசடிக்கு பயன்படுத்திய மொபைல் போன் உள்ளிட்ட சாதனங்கள் கைப்பற்றப்பட்டன.
இவர்களிடமிருந்து கைப்பற்றிய மின் சாதனங்களில் இவர்கள், பெண்களின் நிர்வாணப் படங்களை பலருக்கு அனுப்பி அவர்களை மிரட்டி பணம் பறித்தது தெரியவந்தது. இவ்விதம் பணம் பறித்து அதை அந்நியச் செலாவணி மோசடிக்கு பயன்படுத்தியுள்ளனர். இதுகுறித்து விசாரிக்குமாறு அமலாக்கத் துறை, வருமான வரித் துறை அதிகாரிகளை டெல்லி போலீஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
மோசடி கும்பல் செயலி மூலம்கடன் கேட்டு விண்ணப்பிப்பவர் களுக்கு கடன் வழங்கும். கடன்தொகையை செலுத்தத் தவறும்போது குறுகிய காலத்திலேயே அவர்கள் கடனாக பெற்ற தொகையை விட 10 முதல் 20 மடங்குஅதிக தொகை கேட்டு மிரட்டும்.தகாத வார்த்தைகள், நேரடியாகஅச்சுறுத்தல், தனி நபரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களை செய்வது போன்ற நடவடிக்கைகளில் இக்கும்பல் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தியாவில் டெல்லியைச் சேர்ந்த கிருஷ்ணா என்கிற ரவிசங்கர் மூளையாக செயல்பட்டுள்ளார். இவரை ஜோத்பூரில் போலீஸார் கைது செய்தனர். சீனாவைச் சேர்ந்தவரின் ஆலோசனையின் பேரில்இவர் செயல்பட்டது தெரியவந்துள்ளது. இவருடன் சேர்த்து சில சீனர்களும் கைது செய்யப்பட்டனர். ஆனால் அவர்கள் பற்றிய விவரத்தை போலீஸார் தெரிவிக்க வில்லை.
கடனாளர்களின் வங்கிக் கணக்கு புத்தகம் உள்ளிட்ட விவரங்களை சீன நாட்டினருக்கு அளித்து அவர்கள் மிரட்டி வசூலிக்கும் பணத்தை கிரிப்டோ கரன்சியாக மாற்றி அதன் மூலம் அந்நியச் செலாவணி மோசடியில் ரவிசங்கர் ஈடுபட்டது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. கிரிப்டோ கரன்சிகணக்கு வைத்திருந்த 3 சீனர்களின்விவரங்களும் அவர்களது கணக்குவிவரமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடன் தேவைப்படுவோரை அணுகுவது அல்லது கடன் பெற்றவர்களை மிரட்டுவது உள்ளிட்ட பணிகளை அடியாட்களின் உதவியோடு கார்த்திக் பஞ்சால் செய்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டதாக டெல்லி காவல் துறை ஆணையர் ராகேஷ் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.
கடன் தேவைப்படுவோருக்கு எவ்வித விசாரணையும் இன்றி கடன் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல அவர்கள் செலுத்த வேண்டியதொகை பல மடங்கு அதிகரித்துள்ளது. வட்டி அந்த அளவுக்கு மிகஅதிகமாக நிர்ணயிக்கப்பட்டி ருந்தது.
ஒருவருக்கு ரூ.6 ஆயிரம் கடன் வழங்கப்படுகிறது என்றால்அவரிடம் சேவைக்கட்டணமாக ரூ.2,300 பிடித்தம் செய்யப்பட்டுரூ.3,700 மட்டுமே வழங்கப்பட்டுள் ளது. கடன் பெற்றவர் ரூ.6 ஆயிரத்தை திருப்பிச் செலுத்த வேண்டும். கெடு தேதி தவறும்பட்சத்தில் திருப்பிச் செலுத்த வேண்டிய தொகை ரூ.30 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை உயர்ந்ததாக மல்ஹோத்ரா தெரிவித்தார்.
முன்பண செயலியானது சீனாவைச் சேர்ந்த சர்வருடன் இணைக்கப்பட்டதைப் போன்று போலியாக இங்கு செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த செயலி தொடர்பான உண்மையான விவரங்கள் எதையும் கூகுள்பிளேஸ்டோரில் பதிவு செய்யவில்லை. இந்த மோசடியில் பாதிக்கப்பட்டோர் விவரங்களை சேகரிப்பதோடு, இந்த மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக இன்னும் பலர் கைது செய்யப்படுவர் என்று ஆணையர் மல்ஹோத்ரா தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT