Published : 02 Apr 2022 10:37 AM
Last Updated : 02 Apr 2022 10:37 AM
புதுடெல்லி: வரம்பு மீறி குழந்தைகளை காட்சிப்படுத்துவது போக்சோ சட்டத்தின் தண்டனைக்கு உரியது என மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி விளக்கம் அளித்துள்ளார். மக்களவையில் திமுக எம்.பி. கனிமொழி எழுப்பிய கேள்விக்கானப் பதிலாக இதனை அவர் தெரிவித்தார்.
திமுக மகளிர் அணிச் செயலாளரும் மக்களவை திமுக குழுத் துணைத் தலைவருமான கனிமொழி எழுப்பியக் கேள்வியில், "இணைய தொடர்கள், திரைப்படங்கள் போன்ற பொழுதுபோக்குத் துறைகளில் பல பெண் குழந்தைகளும் நடிக்கின்றனர். அவர்களில் பலர் எடுக்கப்படுகிற காட்சி பற்றிய புரிதல் இல்லாமலேயே நிர்வாணம் உள்ளிட்ட சில வரம்பு மீறிய காட்சிகளில் நடிக்க வைக்க கட்டாயப்படுத்தப் படுகிறார்கள். இந்த நிலையில் குழந்தைகளை நடிக்க வைக்கும் போது தயாரிப்பு நிறுவனங்களுக்கு அரசு சார்பில் தெளிவான வரையறையுடன் கூடிய ஆலோசனைகள் வழங்கப்பட்டு இருக்கிறதா?
ஏனென்றால், பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்கு நாம் இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. இவர்களுக்கானப் பாதுகாப்பு குறித்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு தெளிவான ஆலோசனை வழங்கி இருக்கிறதா?" எனக் கேட்டிருந்தார்.
கனிமொழி கேள்விக்கு விளக்கம் அளித்த மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நல துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறும்போது, "பெண் குழந்தைகளை நிர்வாணக் காட்சிகள் உள்ளிட்ட வரம்புமீறிய காட்சிகளில் நடிக்க வைத்தல் என்பது போக்சோ சட்டத்தின்படி குற்றம் என்பதை நான் அழுத்தம் திருத்தமாக தெரிவித்துக் கொள்கிறேன். இதுபோன்ற காட்சிகளை பரப்புதலும் தடை செய்யப்பட்டது என்றும் போக்சோ சட்டத்தில் கொண்டு வரக் கூடியது என்றும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விவகாரத்தில் மத்திய அரசு மாநில அரசுகளுடன் இணைந்து இவற்றைத் தடுக்க உறுதி பூண்டுள்ளது.
இதுபற்றிய ஆலோசனைகள் என்பதைத் தாண்டி நாங்கள் ஊடக நிறுவனங்களுடன் இது தொடர்பாக தொடர்ந்து உரையாடி வருகிறோம். பெண் குழந்தைகளை வரம்பு மீறிய காட்சிகளுக்குள் ஈடுபடுத்தினால் எந்தவிதமான பாரபட்சமும் பார்க்கப்படாது. இவர்கள் மீது போக்சோ சட்டம் பயன்படுத்தப்படும் என்பதை அரசியல் வேறுபாடுகள் இன்றி இந்த அவையில் நான் தெரிவித்துக் கொள்கிறேன்" எனப் பதிலளித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT