விமான நிறுவன இணையத்தை ஹேக் செய்த பொறியாளர்
பெங்களூரு: கர்நாடக தலைநகர் பெங்களூரை சேர்ந்த மென்பொருள் பொறியாளர் நந்தன் குமார். இவர் அண்மையில் பிஹார் தலைநகர் பாட்னாவில் இருந்து பெங்களூருக்கு இன்டிகோ விமானத்தில் பயணம் செய்தார். வீட்டுக்கு வந்தபோது அவருடைய பெட்டி மாறி இருந்தது தெரியவந்்தது. இதுகுறித்து தகவல் தெரிவித்தும் விமான நிறுவனம் நடவடிக்கை எடுக்கவில்லை.
அதிருப்தி அடைந்த நந்தன் குமார் விமான நிறுவன இணை யத்தை ஹேக் செய்தார். அதில் இருந்து சக பயணியின் தொடர்பு எண்ணை கண்டுபிடித்தார். அவரை நேரடியாக தொடர்பு கொண்டு பேசினார். இருவரும் பரஸ்பரம் பெட்டிகளை மாற்றிக் கொண்டனர்.
இன்டிகோ விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "எங்களது இணையம் பாதுகாப்பானது. பிஎன்ஆர் எண், பெயரின்கடைசி எண், தொடர்பு எண், இ-மெயில் முகவரியை பயன்படுத்தி முன்பதிவு விவரங்களை எந்தவொரு பயணியும் இணையத்தில் இருந்து பெற முடியும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
