Published : 01 Apr 2022 10:10 PM
Last Updated : 01 Apr 2022 10:10 PM
புதுடெல்லி: உத்தரப் பிரதேச மாநிலத்தில் குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதை ஊக்குவிக்க ஏப்ரல் 4 முதல், ‘பள்ளிக்கு செல்லுங்கள்’ திட்டம் தொடங்கப்பட உள்ளது. இதன் மூலம், அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஒரு கோடி மாணவர்களை பள்ளிகளில் சேர்க்க அம்மாநில முதல்வரான யோகி ஆதித்யநாத் இலக்கு நிர்ணயித்துள்ளார்.
மீண்டும் பாஜக ஆட்சி தொடரும் உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்னும் கல்வியறிவில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதற்காக அங்கு ஆளும் அரசுகள் எடுத்த பல முயற்சிகளுக்கு எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை. குறிப்பாக உத்தரப் பிரதேச மாநிலத்தில் அரசு பள்ளிகளில் தொடர்ந்து பெரிய மாற்றங்கள் செய்ய பாஜக அரசு முயற்சித்தது. இந்த நிலையில் அம்மாநில முதல்வரான யோகி ஆதித்யநாத் மீண்டும் அரசு பள்ளிகள் மீதான கவனத்தை கையில் எடுத்துள்ளார்.
இந்தமுறை பள்ளிகளின் மீது கவனம் செலுத்த அவற்றை தத்தெடுக்கும்படி, தனது எம்எல்ஏ மற்றும் அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். உத்தரப் பிரதேசத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மாற்றங்கள் செய்ய பெருநிறுவனங்களுக்கும் அவர் அழைப்பு விடுத்துள்ளார். அந்நிறுவனங்களின் சார்பில் அனைத்து பள்ளிகளிலும், குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் செய்ய வலியுறுத்தி உள்ளார்.
அந்நிறுவனங்கள் உதவியால் மாநிலத்தின் 1.58 லட்சம் அரசு தொடக்கப்பள்ளிகளை நவீனப்படுத்தவும், பள்ளிகளுக்கு குழந்தைகளைச் சேர்க்க, "பள்ளிகளுக்கு செல்லுங்கள்" திட்டத்தை அமலாக்க ஆசிரியர்களும் வீடுதோறும் செல்ல வேண்டும் எனவும் இப்பணியில் தனியார் நிறுவனங்கள் மற்றும் முன்னாள் மாணவர்களும் உதவ முன்வரவேண்டும் எனவும் முதல்வர் யோகி கோரியுள்ளார்.
கடந்த 2016-17ம் ஆண்டில் அரசுப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை 1.56 கோடியாக இருந்தது. மாணவர்களின் எண்ணிக்கையைக் கூட்ட முதல்வர் யோகி எடுத்த முயற்சியால், மாணவர்கள் சேர்க்கை 1.70 கோடி என்றானது. இதை மேலும் உயர்ந்தும்படியும், அடுத்த ஐந்து ஆண்டுகளில் கூடுதலாக ஒரு கோடி மாணவர்களை சேர்க்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT