Published : 01 Apr 2022 06:39 PM
Last Updated : 01 Apr 2022 06:39 PM
சென்னை: நாட்டில் 4.5 லட்சம் அங்கன்வாடிகளில் குடிநீர், கழிவறை வசதிகள் இல்லை என மத்திய அரசு அதிர்ச்சித் தகவலை தெரிவித்துள்ளது.
நாட்டிலுள்ள அங்கன்வாடிகள் நிலை குறித்து மாநிலங்களவையில் திமுக எம்.பி. கனிமொழி என்.வி.என்.சோமு கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி அளித்த பதிலில், "கடந்த மூன்றாண்டுகளில் 13.99 லட்சம் அங்கன்வாடிகள் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டு, அதில் 13.89 லட்சம் அங்கன்வாடிகள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. இதில் 12.55 லட்சம் அங்கன்வாடிகள் சொந்த மற்றும் கான்கிரீட் கட்டிடங்களில் இயங்குகின்றன. 1.64 லட்சம் அங்கன்வாடிகளில் குடிநீர் வசதி இல்லை. 2.86 அங்கன்வாடிகளில் கழிப்பிட வசதி இல்லை.
இந்த நிலையை மாற்ற அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. நாடு முழுக்க 4 லட்சம் அங்கன்வாடி கட்டிடங்கள் கட்ட ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகங்களுடன் இணைந்து திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் இக்கட்டடங்களைக் கட்ட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஒவ்வொரு அங்கன்வாடியிலும் குடிநீர் வசதியை ஏற்படுத்த பத்தாயிரம் ரூபாயும்; கழிப்பிட வசதிக்கென 12 ஆயிரம் ரூபாயும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதுதவிர குடிநீர் சுத்திகரிப்பு உபகரணம், மேஜை நாற்காலிகள், மற்றும் கற்றலுக்குத் தேவையானவற்றை வாங்கவும் ஒவ்வொரு அங்கன்வாடிக்கும் தனித்தனியே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. முழுமையான விரைவான சேவையை வழங்கும் வகையில் அங்கன்வாடியில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஸ்மார்ட் போன் வழங்கப்பட்டுள்ளது.
அங்கன்வாடிகளில் தரமான பயிற்சி, கல்விமுறை, கூடுதல் ஊட்டச்சத்து போன்றவை ஒவ்வொரு குழந்தைக்கும் வழங்கப்படுவதை உறுதிசெய்யும் வகையில் விதிமுறைகள் வகுக்கப்பட்டு நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது.
சக்ஷம் அங்கன்வாடி மற்றும் போஷன் 2.0 திட்டத்தில் அங்கன்வாடி சேவைகளையும் சமீபத்தில் இணைத்த பின்பு , வரும் ஐந்தாண்டுகளில் ஆண்டுக்கு 40 ஆயிரம் வீதம் இரண்டு லட்சம் அங்கன்வாடிகளை தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளின் கற்பனைத் திறன், அறிவுத் திறன், ஆகியவற்றை மேம்படுத்துவதுடன் தரமான கல்வி வழங்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அத்துடன் இன்டர்நெட், எல்இடி. திரை வகுப்புகள், குடிநீர் சுத்திகரிப்பு கருவிகள், ஆடியோ – வீடியோ வசதிகளுடன் கூடிய கல்வி பயிற்று முறை போன்ற அடிப்படைக் கட்டமைப்புகள் இந்த இரண்டு லட்சம் அங்கன்வாடிகளில் செயல்படுத்தப்படும்" இவ்வாறு தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT