Published : 31 Mar 2022 09:20 AM
Last Updated : 31 Mar 2022 09:20 AM
ஹரியாணா: தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலையுயர்வு குறித்து கேள்வி எழுப்பிய நிருபரை யோகாகுரு பாபா ராம்தேவ் எச்சரித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பெட்ரோல், டீசல் விலை கடந்த 10 நாட்களில் லிட்டருக்கு ரூ.6.40 வரை உயர்ந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர்.
இந்நிலையில், தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலையுயர்வு குறித்து கேள்வி எழுப்பிய நிருபரை யோகாகுரு பாபா ராம்தேவ் கடுமையான வார்த்தைகளால் எச்சரித்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
யோகா குரு ராம்தேவ் ஹரியாணா மாநிலம் கர்னாலில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் நிருபர் ஒருவர், "இந்த தேசத்தில் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.40, கேஸ் விலையை சிலிண்டருக்கு ரூ.300 என்று குறைப்பவர்கள் ஆட்சியை மக்கள் பரிசீலிக்க வேண்டும் என்று கூறியிருந்தீர்களே" எனக் கேள்வி எழுப்பினார்.
அதற்கு ராம்தேவ், "ஆமாம் நான் தான் சொன்னேன். அதற்கென்ன? உன்னால் என்ன செய்ய முடியும்? இது மாதிரியான கேள்விகளைக் கேட்க வேண்டாம். நான் என்ன நீ கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொல்ல உனக்கு ஒப்பந்தப்பட்டிருக்கிறேனா?" என்று கண்டித்தார்.
ஆனால் நிருபரோ மீண்டும் அதே கேள்வியை முன்வைக்க இம்முறை ராம்தேவ் ஆத்திரமடைந்தார். "நான் தான் அன்று சொன்னேன். நீ வாயை மூட. உன்னால் என்ன செய்ய முடியும். இது நல்லதற்கல்ல. இப்படிப் பேசாதே. நீ நல்ல பெற்றோருக்குத் தான் பிறந்திருப்பாய் என நினைக்கிறேன்" என்று காட்டமாகக் கூறினார்.
அவரது இந்த விமர்சனம் அடங்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் ராம்தேவ் விலையுயர்வை ஆதரித்துப் பேசுகையில், "எரிபொருள் விலை குறைந்தால் வரி கிடைக்காது என அரசாங்கம் சொல்கிறது. வரி கிடைக்காவிட்டால் தேசத்தை எப்படி வழிநடத்துவது. சாலைகள் எங்கிருந்து வரும்? அரசு ஊழியர்களுக்கு சம்பளம் தான் எப்படிக் கொடுக்க முடியும். விலைவாசி குறைய வேண்டும் என்பதை நானும் ஒப்புக்கொள்கிறேன். ஆனால், மக்களும் கடுமையாக உழைக்க வேண்டுமல்லவா? நான் காலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை உழைக்கிறேன்" என்று கூறியுள்ளார்.
Yoga Guru Ramdev was seen on camera losing his cool and threatening a journalist, who asked him about his comments in the past on reducing petrol price. @ndtv pic.twitter.com/kHYUs49umx
— Mohammad Ghazali (@ghazalimohammad) March 30, 2022
பாபா ராம்தேவுக்கு புதிதல்ல.. பொது இடங்களில் சர்ச்சைப் பேச்சுக்களை உதிர்ப்பது பாபா ராம்தேவுக்கு புதிதல்ல. கடந்த ஆண்டு இந்தியாவில் கரோனா இரண்டாவது அலை உச்சத்தில் இருந்த வேளையில்,
யோகா குரு பாபா ராம்தேவ், ஆங்கில (அலோபதி) மருத்துவம் காரணமாக லட்சக் கணக்கான கரோனா நோயாளிகள் உயிரிழக்கின்றனர் எனக் கூறியிருந்தார்.மேலும் அலோபதி மருத்துவம் முட்டாள்தனமானது என்றும் அவர் பேசுவது போன்ற வீடியோசமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இவரது இந்தகருத்துக்கு அலோபதி மருத்துவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT