Published : 29 Mar 2022 08:26 AM
Last Updated : 29 Mar 2022 08:26 AM
பெங்களூரு: கர்நாடகாவில் பக்தர் ஒருவருடன்அவரது செல்ல நாயும் ஆந்திராவில் உள்ள ஸ்ரீசைலத்துக்கு 600கி.மீ. தூரம் நடந்து சென்று வருவது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் வசித்து வருபவர் அடஹள்ளி சங்கரய்யா மடபதி(50). இவர் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்டுதோறும் ஆந்திர மாநிலம் ஸ்ரீசைலத்தில் உள்ள மல்லிகார்ஜுன் கோயிலுக்கு நடந்து சென்று வழிபாடு செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சங்கரய்யா மடபதி தனது வருடாந்திர யாத்திரைக்கு புறப்பட்டபோது, அவரது செல்ல நாய் அவருடன் நடந்து சென்றது.
சுமார் 100 கி.மீ. தூரம் நடந்து சென்றபோது நாய் மிகவும் களைப்படைந்தது. இதனால் உறவினர் மூலம் நாயை ஊருக்கு அனுப்பி வைத்தார். இந்த ஆண்டு ஆன்மிக யாத்திரைக்கு புறப்படும்போது வழக்கம்போல செல்ல நாய் அவருடன் துணைக்கு நடந்து சென்றது. ஆனால் இந்த முறை களைப்பு அடையாமல் 600 கி.மீ. தூரம் வரை அந்த செல்லப்பிராணி நடந்து சென்றது.
இதுகுறித்து சங்கரய்யா மடபதிகூறுகையில், ‘‘நான் 5 ஆண்டுகளாக இந்த செல்லப் பிராணியை வளர்த்து வருகிறேன். சாலையோரத்தில் கிடைத்த இந்த செல்லப் பிராணிக்கு பெயர் எதுவும்சூட்டவில்லை. வழக்கமாக நான்கடைக்கு சென்றாலும், தோட்டத்துக்கு சென்றாலும் இந்த பிராணி என் பின்னாலேயே ஓடிவரும். அதேபோல ஆன்மிக யாத்திரை மேற்கொள்ளும்போதும் உடன் வரும். கடந்த ஆண்டு பாதியிலே திரும்பிவிட்ட இந்த பிராணி, இந்த ஆண்டு 600 கிலோ மீட்டர் தூரம் நடந்துவரும் என நான் எதிர்ப்பாக்கவில்லை.
கடந்த 18-ம் தேதி தொடங்கிய எங்களது பயணம் இன்னும் ஓரிரு தினங்களில் வெற்றிகரமாக சைலத்தை அடையவுள்ளது. தினமும் சுமார் 50 கி.மீ. தூரம் வரை நடந்தோம். வழிநெடுகிலும் எனக்கு துணையாக எனது செல்லப்பிராணி வந்தது. என்னுடன் செல்லப்பிராணி நடந்து வருவதை பார்த்து வியந்த பொதுமக்கள் சிலர் எங்களுக்கு உணவு பரிமாறி உபசரித்தனர். எனது செல்லப் பிராணியும் மல்லிகார்ஜுனை காண்பதற்கு அனுமதிக்குமாறு கோயில் நிர்வாகிகளிடம் சிறப்பு அனுமதி கேட்க முடிவெடுத்துள்ளேன்'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT