Published : 29 Mar 2022 08:32 AM
Last Updated : 29 Mar 2022 08:32 AM
புதுடெல்லி: பாஜக முன்னாள் தலைவர் கல்யாண் சிங், நடிகர் விக்டர் பானர்ஜி உள்ளிட்ட 74 பிரபலங்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று பத்ம விருதுகளை வழங்கினார்.
நாட்டின் மிக உயரிய பத்ம விருதுகள், ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தையொட்டி அறிவிக்கப்படுகின்றன. பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்மஸ்ரீ ஆகிய 3 பிரிவுகளின் கீழ் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.
கலை, இலக்கியம், கல்வி, தொழில், மருத்துவம், விளையாட்டு, சமூக சேவை, பொது விவகாரங்கள் என பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தமற்றும் சிறப்பான சேவையாற்றி வர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.
இந்த ஆண்டு நான்கு பேருக்கு பத்ம விபூஷண், 17 பேருக்கு பத்ம பூஷண், 107 பேருக்கு பத்ம என மொத்தம் 128 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன.
விருது அறிவிக்கப்பட்டவர் களில் 34 பேர் பெண்கள் ஆவர். வெளிநாட்டினர், வெளிநாடு வாழ் இந்தியர்கள், வெளிநாட்டில் வசிக்கும் இந்திய குடிமக்கள் பிரிவில் 10 பேருக்கு விருது அறிவிக்கப்பட்டது. மேலும் 13 பேருக்குமரணத்துக்கு பிறகு விருது அறிவிக்கப்பட்டது. இதில் கடந்த மார்ச் 21-ம் தேதி நடைபெற்ற முதல் விழாவில் 54 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
இதையடுத்து இரண்டாவது விழா, டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்றுநடைபெற்றது. இதில் 74 பிரபலங்களுக்கு பத்ம விருதுகளை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.
விழாவில் பாரம்பரிய இந்துஸ்தானி இசைப் பாடகர் பிரபா அத்ரே, உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் கல்யாண் சிங் ஆகியோருக்கு பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டது. மறைந்த கல்யாண் சிங்குக்கு பதிலாக அவரது மகன் ராஜ்வீர் சிங் விருதை பெற்றுக் கொண்டார்.
பிரபல இந்தி மற்றும் வங்காள நடிகர் விக்டர் பானர்ஜிக்கும் கரோனா தடுப்பூசி உற்பத்தி செய்யும் ஹைதராபாத் பாரத் பயோடெக்நிறுவனத்தின் தலைவர் கிருஷ்ணமூர்த்தி எல்லா, அவரது மனைவிசுசித்ரா கிருஷ்ண எல்லா ஆகியோருக்கு கூட்டாகவும் பத்மபூஷண் விருது வழங்கப்பட்டது. கல்வியாளர்கள் டாக்டர் பிரதிபா ராய், ஆச்சார்ய வசிஷ்ட திரிபாதி உள்ளிட்ட மூவரும் பத்ம பூஷண் விருதை பெற்றனர்.
பாராலிம்பிக்ஸில் தங்கப் பதக்கம் வென்ற சுமித் அந்தில், பிரமோத் பகத், ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா, தமிழகத்தை சேர்ந்த பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி, டாக்டர் வீராசாமி சேஷய்யா, புதுச்சேரி தவில் இசைக் கலைஞர் ஏ.வி.முருகையன் உள்ளிட்டோருக்கு பத்ம விருது வழங்கி குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் கவுரவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT