Published : 28 Mar 2022 08:16 PM
Last Updated : 28 Mar 2022 08:16 PM
மும்பை: அடுத்தடுத்து தோல்விகளால் துவண்டு கிடக்கும் காங்கிரஸ் கட்சி மீண்டெழ வேண்டும் என்று பாஜக விருப்பம் தெரிவிப்பது, தேசிய அளவில் மாநிலக் கட்சிகளின் ஆதிக்கம் அதிகரிப்பதைக் கண்டு அக்கட்சி அஞ்சுகிறதோ என்ற கேள்வியை எழுப்புகிறது.
"ஜனநாயகத்திற்கு வலுவான காங்கிரஸ் கட்சி அவசியம். காங்கிரஸ் வலுவிழந்தால் எதிர்கட்சி இடத்தை மாநிலக் கட்சிகள் பிடித்துவிடும்" என்று மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கடந்த வாரத்தில், லோக்மாத பத்திரிகை விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டார். அப்போது அங்கு நடந்த கேள்வி - பதில் நிகழ்வில் பங்கேற்ற அமைச்சர், "ஜனநாயகம் எனும் வண்டி ஆளுங்கட்சி, எதிர்கட்சி என்னும் இரண்டு சக்கரங்களால் இயங்குகிறது. ஜனநாயகத்திற்கு வலுவான எதிர்கட்சித் தேவை. அதனால், காங்கிரஸ் கட்சி மீண்டும் வலுவடை வேண்டும் என்று நான் மனதார விரும்புகிறேன்.
காங்கிரஸ் கட்சி வலுவிழந்துள்ள நிலையில், எதிர்கட்சி இடத்தை மாநிலக் கட்சிகள் பிடித்துவிடும். இது நல்ல அறிகுறியும் இல்லை; ஜனநாயகத்திற்கும் நல்லதில்லை.
கட்சியின் தொடர் தோல்விகளால் காங்கிரஸ் தலைவர்கள் மனம் தளர்ந்து விடாமல் தொடர்ந்து கட்சியுடன் இணைந்திருக்க வேண்டும். காங்கிரஸ் சித்தாந்தத்தை பின்பற்றுபவர்கள் தோல்விகளால் விரக்தி அடையாமல், நம்பிக்கையுடன் பயணிக்க வேண்டும். அவர்கள் தொடர்ந்து உழைக்க வேண்டும். கட்சியில் நீடித்திருக்க வேண்டும். தோல்வி என்று ஒன்று வந்தால் வெற்றியும் ஒரு நாள் வந்தே தீரும்.
நாடாளுமன்றத்தில் பாஜக 2 இடங்களை மட்டுமே பெறமுடியும் என்ற நிலை இருந்தது. ஆனால், கட்சித் தொண்டர்களின் அயராத முயற்சியால் காலம் மாறியது. அடல் பிகாரி வாஜ்பாய் பாஜக பிரதமராக பதவியேற்றார். அதனால், நம்பிக்கை இழந்திருக்கும் தருணங்களில் ஒருவர் தனது சித்தாந்தத்தை விட்டுவிடக் கூடாது" என்று அவர் பேசியதை என் டிடிவி பதிவு செய்துள்ளது.
காங்கிரஸின் குடும்பத் தலைமைக்கு எதிராக பாஜக பேசியும், காங்கிரஸ் இல்லாத இந்தியா (காங்கிரஸ் முக்த் பாரத்) என்று அதிகாரபூர்வமில்லாமல் மேடைகளில் பாஜக பேசியும் வருவது குறிப்பிடத்தக்கது.
தற்போது அருணாச்சலப் பிரதேசம், கோவா, குஜராத், ஹிமாச்சல் பிரதேசம், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட் மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் பாஜக ஆட்சி நடக்கிறது.
அசாம், பிஹார், ஹரியாணா, மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, புதுச்சேரி, சிக்கிம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் பாஜக கூட்டணியின் ஆட்சி நடக்கிறது.
பஞ்சாப் மற்றும் டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது.
ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ள மாநிலக் கட்சிகளைப் பொறுத்தவரை, தமிழகத்தில் திமுக, மகாராஷ்டிராவில் சிவசேனா மற்றும் ஜார்க்கண்டில் ஜார்ண்ட் முக்தி மோர்ச்சா ஆகிய மாநிலக் கட்சிகளின் ஆட்சிகள் நடக்கின்றன.
இதர மாநில கட்சிகள் என்று எடுத்துக்கொண்டால், ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், தெலங்கானாவில் தெலுங்கு ராஷ்ட்டிர சமிதி, கேரளாவில் இடதுசாரிகள், மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.
இந்தப் பின்னணியில், 2024 மக்களவைத் தேர்தலில் மாநிலக் கட்சிகள் ஆதிக்கம் செலுத்தக் கூடும் என்ற அச்சத்தின் வெளிப்பாடாகவே நிதின் கட்காரி இவ்வாறு காங்கிரஸ் கட்சி மீண்டெழ மனபூர்வமான விருப்பத்தைத் தெரிவிக்கிறாரோ என்ற கேள்வியை அரசியல் நோக்கர்கள் எழுப்புகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT