Published : 28 Mar 2022 07:05 AM
Last Updated : 28 Mar 2022 07:05 AM

மத்திய அரசை கண்டித்து இன்று முதல் நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் 2 நாள் பொது வேலைநிறுத்தம்: வங்கி சேவைகள் கடுமையாக பாதிக்கும்

சென்னை: மத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் இன்றும், நாளையும் பொது வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றன. இதில் வங்கி ஊழியர்களும் பங்கேற்கின்றனர். வார இறுதியில் 2 நாட்கள் விடுமுறை வருவதால் வங்கி சேவைகள் கடுமையாக பாதிக்க வாய்ப்புள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கான 18 மாத அகவிலைப்படி நிலுவையை உடனே வழங்க வேண்டும். மத்திய அரசு அலுவலகங்களில் 8.75 லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். பொதுத் துறை வங்கிகளை தனியார்மயமாக்க கூடாது என்பன உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசு ஊழியர்கள் இன்றும், நாளையும் (மார்ச் 28, 29) நாடுதழுவிய பொது வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இதில் மத்திய, மாநில அரசு ஊழியர்களின் அகில இந்திய அமைப்புகள், காப்பீட்டு நிறுவனங்கள், வங்கி உள்ளிட்ட பொதுத் துறை நிறுவனங்களின் தொழிற்சங்கங்கள் பங்கேற்கின்றன.

தமிழகத்தில் 50 லட்சம் பேர் உட்பட நாடு முழுவதும் 25 கோடி பேர் வேலைநிறுத்தப் போராட்டத் தில் பங்கேற்பர் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆளும் திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும், சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்களும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. எனினும், அரசு ஊழியர்கள் இப்போராட்டத்தில் பங்கேற்க மத்திய, மாநில அரசுகள் தடை விதித்துள்ளன. தடையை மீறி வேலைநிறுத்தம் செய்தால், பணிக்கு வராத நாட்களுக்கு சம்பளம், படி கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. தனியார் பேருந்துகள் முழுமையாக இயங்கும் என்று பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. மெட்ரோ ரயில் உட்பட அனைத்து ரயில்களும் வழக்கம்போல இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, சென்னையில் பல இடங்களில் இன்று ஆர்ப்பாட்டம், சாலை மறியல் நடத்த தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன. இதையடுத்து, நகரில் 15 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். வங்கி சேவை பாதிக்கும் வங்கி ஊழியர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதால் இன்றும் நாளையும் வங்கிகள் செயல்படாது. ஏப்.1-ம் தேதி வங்கிகள் செயல் பட்டாலும், வருடாந்திர கணக்கு முடிக்கும் பணியால் வாடிக்கையாளர் சேவை இருக்காது. ஏப். 2-ம் தேதி சனிக்கிழமை தெலுங்கு வருடப் பிறப்பு என்பதால் அன்றும் வங்கிகளுக்கு விடுமுறை.

மறுநாள் ஞாயிற்றுக்கிழமை வழக்கமான விடுமுறை நாளாகும். எனவே, இந்த வாரத்தில் புதன், வியாழன் (மார்ச் 30, 31) ஆகிய 2 நாட்கள் மட்டுமே வங்கிகள் செயல்படும். இதனால், வங்கி சேவைகள் கடுமையாக பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. எனினும், ஆன்லைன் சேவைகள் எப்போதும் போல தடையின்றி செயல்படும் என்றும் ஏடிஎம் மையங்களில் பணத் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க போதிய அளவு பணம் இருப்பு வைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x