Published : 25 Mar 2022 04:52 PM
Last Updated : 25 Mar 2022 04:52 PM
லக்னோ: உத்தர பிரதேசத்தில் முதல்வர் ஆக யோகி ஆதித்யநாத் இரண்டாவது முறையாக இன்று பதவியேற்றுக் கொண்டார். 50 ஆயிரம் பேர் பங்கேற்கின்ற பிரமாண்ட ஸ்டேடியத்தில் நடந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, பல மாநில முதல்வர்கள், தொழிலதிபர்கள், திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
உத்தர பிரதேசத்தின் 403 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதில் ஆளும் பாஜக கூட்டணி 273 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. முதல்வர் யோகி ஆதித்யநாத் கோரக்பூர் தொகுதியில் வெற்றி பெற்றார்.
பாஜக எம்எல்ஏக்களின் கூட்டத்தில் யோகி ஆதித்யநாத் முதல்வராக ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து பதவியேற்பு விழா இன்று நடைபெற்றது. லக்னோவில் அமைந்துள்ள அடல் பிஹாரி வாஜ்பாய் கிரிக்கெட் மைதானத்தில் இன்று மாலை பதவியேற்பு விழா நடைபெற்றது. யோகி ஆதித்யநாத் 2-வதுமுறையாக முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். உ.பி.ஆளுநர் ஆனந்திபென் படேல் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
உத்தரபிரதேசத்தின் துணை முதல்வர்களாக பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த கேசவ பிரசாத் மௌரியா, பிராமணர் சமூகத்தைச் சேர்ந்த பிரஜேஷ் பதக் பதவியேற்றுக் கொண்டனர். அனைத்து சமூகத்தினரையும் உள்ளடக்கி 43 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
விழாவில் பிரதமர் நரேந்திரமோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். மத்திய அமைச்சர்கள், பாஜக முதல்வர்கள், பாஜக மூத்த தலைவர்கள், தொழிலதிபர்கள், ஆன்மிக தலைவர்களும் விழாவில் பங்கேற்றனர்.
விழா நடைபெற்ற ஸ்டேடியத்தில் சுமார் 50,000 பேர் அமர்ந்து இருந்தனர். மாநிலம் முழுவதும் இருந்து பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் பெருந்திரளாக விழாவில் பங்கேற்றனர். இந்த மைதானத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி உட்பட 60 தொழிலதிபர்களுக்கும் பாலிவுட் முன்னணி நடிகர், நடிகைகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படஇயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி, நடிகர் அனுபம்கெர் உள்ளிட்ட படக்குழுவினரும் விழாவுக்கு அழைக்கப்பட்டு இருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT