Published : 25 Mar 2022 12:42 PM
Last Updated : 25 Mar 2022 12:42 PM

பிர்பும் படுகொலை; விசாரணை சிபிஐக்கு மாற்றம்: கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவு

8 பேர் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டனர் பிர்பும் படுகொலை நடந்த பகுதி

கொல்கத்தா: மேற்குவங்கத்தில் 8 பேர் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கு விசாரணையை மத்திய ஏஜென்சியிடம் ஒப்படைக்கக் கூடாது என்ற மம்தா பானர்ஜி அரசின் கோரிக்கையை நிராகரித்த கொல்கத்தா உயர்நீதிமன்றம் வழக்கை சிபிஐக்கு மாற்றி இன்று உத்தரவு பிறப்பித்தது.

மேற்குவங்க மாநிலம் பிர்பும் மாவட்டம் ராம்புராட் பகுதி யில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பஞ்சாயத்துத் தலைவர் பாதுஷேக் என்பவர் கடந்த திங்கட்கிழமை இரவு கொல்லப்பட்டார். இதையடுத்து, ஏற்பட்ட கலவரத்தில் போக்டுய் என்ற கிராமத்தில் வீடுகளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர். இதில் 3 பெண்கள், 2 குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டனர்.

எரித்துக் கொல்லப்பட்ட உடல்கள் ராம்புராட் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டன. இதில், எரிக்கப்படுவதற்கு முன் 8 பேரும் கடுமையாக அடித்து துன்புறுத்தப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இச்சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜகவினரும் மாநில ஆளுநர் ஜெகதீப் தன்கரும் இந்த சம்பவங்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்ட அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கொலையில் தொடர்புடையாக புகார் எழுந்த ராம்புராட் வட்டார திரிணமூல் காங்கிரஸ் தலைவர் அனருல் ஹூசைனை கைது செய்ய உத்தரவிட்டார். இதன் பிறகு அவர் கைது செய்யப்பட்டார்.

இந்தநிலையில் இந்த சம்பவம் தொடர்பாக கொல்கத்தா உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு விசாரணையை மேற்கொண்டுள்ளது. இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால் இதற்கு மேற்குவங்க அரசு எதிர்ப்பு தெரிவித்து.

இந்தநிலையில் கொல்கத்தா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பிரகாஷ் ஸ்ரீவத்சவா மற்றும் நீதிபதி ஆர் பரத்வாஜ் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன்பு இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க கொல்கத்தா உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

விசாரணையை மத்திய ஏஜென்சியிடம் ஒப்படைக்கக் கூடாது என்ற மம்தா பானர்ஜி அரசின் கோரிக்கையை நிராகரித்த கொல்கத்தா உயர்நீதிமன்றம் வழக்கை சிபிஐக்கு மாற்றியது.
மேற்குவஙக அரசால் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழு இந்த வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்கும் எனத் தெரிகிறது.

ஏப்ரல் 7ஆம் தேதிக்குள் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யுமாறு சிபிஐக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மத்திய தடய அறிவியல் ஆய்வகத்தின் குழுவினர் ஏற்கெனவே குற்றம் நடந்த இடத்தில் மாதிரிகள் மற்றும் ஆதாரங்களை சேகரித்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x