Last Updated : 24 Mar, 2022 01:39 PM

 

Published : 24 Mar 2022 01:39 PM
Last Updated : 24 Mar 2022 01:39 PM

உள்ளூர் டேட்டா சென்டர்களுக்கு மானியங்கள் வழங்கும் யோசனை இல்லை: மத்திய அரசு

மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் | கோப்புப் படம்

புதுடெல்லி: தரவு மையங்கள் அமைக்க மானியம் வழங்கும் யோசனை எதுவும் மத்திய அரசிடம் இல்லை என மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைக்கான இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். இதை அவர், மக்களவையின் திமுக எம்.பி கனிமொழியின் கேள்விக்கு அளித்த பதிலில் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து தூத்துக்குடி தொகுதியின் திமுக எம்.பியான கனிமொழி எழுப்பியக் கேள்வியில், ''நாட்டின் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியை விரிவாக்கும் வகையில் உள்ளூர் தரவு மையங்கள் (டொமஸ்டிக் டேட்டா சென்டர்ஸ்) ஏற்படுத்துவதை ஊக்குவிக்க ஒன்றிய அரசாங்கம் பரிசீலித்து வருகிறதா? அப்படி பரிசீலித்து வருகிறது என்றால் உள்ளூர் தரவு மையங்கள் அமைப்பதற்காக ஏதேனும் ஊக்கத்தொகை அல்லது மானியங்கள் வழங்கப்பட்டிருக்கிறதா?'' எனக் கேட்டிருந்தார். இக்கேள்விக்கானப் பின்னணியில் திமுக மகளிர் அணிச் செயலாளருமான கனிமொழி, தென்னிந்திய மாநிலங்கள் தரவு மையங்கள் அமைப்பது தொடர்பான சாதகமான தகவமைப்புகளைப் பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்தக் கேள்விக்கு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைக்கான இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் அளித்த பதில்: "தரவு மையங்கள் எனப்படும் டேட்டா சென்டர்கள் அமைப்பதற்கான ஊக்கத் தொகைகள் அல்லது மானியங்கள் வழங்குவதற்கான யோசனை எதுவும் அரசிடம் இல்லை. டேட்டா சென்டர்கள் என்பவை ஒட்டுமொத்த 'டிஜிட்டல் இந்தியா' உள் கட்டமைப்பின் ஒரு முக்கிய ஒருங்கிணைந்த அங்கமாகும். பொது கிளவுட் எனப்படும் உலகளாவிய நெட்வொர்க் சர்வர்கள் அடிப்படையிலான சேவைகள் தற்போது அதிகரித்து வருகின்றன. இதனால் தரவு மையங்களுக்கான தேவையும் அதிகரித்திருக்கிறது. இதன் அடிப்படையில் தேசியத் தரவு மையக் கொள்கை ஆய்வில் இருக்கிறது‌. உலகளாவிய நெட்வொர்க் மற்றும் டேட்டா சென்டர்களுக்கான முதன்மையான இடமாக இந்தியாவை உருவாக்க வேண்டும்.

பசுமை தரவு மையம் மற்றும் கிளவுட் சேவைகளுக்கான உலகளாவிய மையமாக இந்தியாவை உருவாக்க உள்ளோம். தேசிய தரவு மையக் கொள்கையாக, தகவல் தொழில்நுட்பத்தில் பாதுகாப்பான மற்றும் நம்பகமான உள்கட்டமைப்புக்கான உள்நாட்டு உபகரணங்கள் மற்றும் தயாரிப்புகள், தீர்வுகளை ஊக்கப்படுத்தும் வகையில் இருக்கும். நமது ஒவ்வொரு கொள்கை முடிவிலும், பொது மக்களுடனான ஆலோசனை ஒரு முக்கியமான விதிமுறையாகவே இருக்கிறது.

அந்த அடிப்படையில் தேசிய தரவு மைய கொள்கைக்காக கடந்த பிப்ரவரி 22, 2022 அன்று சென்னையில் பொது ஆலோசனை மற்றும் கலந்தாய்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், 65-க்கும் மேற்பட்ட பெருநிறுவனங்கள் மற்றும் மத்திய - மாநில அரசு அதிகாரிகள் நேரில் கலந்து கொண்டனர். மேலும், 295-க்கும் மேற்பட்டோர் காணொலி வாயிலாக கலந்துகொண்டு ஆலோசனைகளை முன்வைத்துள்ளனர். இவர்களது ஆலோசனைகளின் அடிப்படையில் தேசிய தரவு மைய கொள்கை ஆய்வு செய்யப்பட்டு வருகிறது'' என்று அமைச்சர் பதிலளித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x