Published : 24 Mar 2022 08:41 AM
Last Updated : 24 Mar 2022 08:41 AM

மாடியில் பழத் தோட்டம்: ஆண்டு முழுவதும் மகசூல்

கேரளாவின் திரூர் பகுதியைச் சேர்ந்த அப்து ரசாக் தனது வீட்டு மொட்டை மாடியில் பழ மரங்களை வளர்த்து மிகப்பெரிய தோட்டத்தை உருவாக்கியுள்ளார்.

திருவனந்தபுரம்: துபாயில் வேளாண் பணி செய்து வந்த அப்துரசாக் கடந்த 2018-ம்ஆண்டு கேரளா திரும்பினார். தனது வீட்டு மொட்டை மாடியில் 135 பழ மரங்களை நட்டு வளர்த் துள்ளார். 135 பிளாஸ்டிக் டிரம்களில் மரங்கள் செழித்து வளர்ந்துள்ளன. இதில் இருந்து அப்து ரசாக் ஆண்டு முழுவதும் மகசூலும் எடுத்து வருகிறார்.

இதுகுறித்து இந்து தமிழ் நாளிதழிடம் அப்துரசாக் கூறிய தாவது: தாய்லாந்துக்கு சென்றிருந்த போது அங்கு பிளாஸ்டிக் டிரம்மில் பழமரங்கள் வளர்க்கும் நுட்பத்தைக் கற்றுக் கொண்டேன். மரங்களை நேரடியாக மண்ணில் நடும் போது அதன் வேர்கள் மண்ணுக்குள் ஆழமாக ஊடுருவும். அதில் நாம் செலுத்தும் உரங்களில் 25 சதவீதம் தான் மரத்துக்குச் செல்லும். 75 சதவீதத்தை மண்ணே எடுத்துக் கொள்ளும். ஆனால் பிளாஸ்டிக் டிரம்மில் மொத்த உரத்தையும் மரமே எடுத்துக் கொள்ளும்.

பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மா, கொய்யா ரகங்களோடு தாய்லாந்து, பாகிஸ்தான், பிரேசில், ஆஸ்திரேலியா என இணைய வெளியில் வாங்கிய வெளிநாட்டு பழ மரங்களும் எனது வீட்டு மொட்டைமாடியில் நிற்கின்றன. 70 நாட்டு மாமரங்கள் என் வீட்டில் வளர்கின்றன.

நேரடியாக மண்ணில் வைக்கும் மரங்களைவிட, பிளாஸ்டிக் டிரம்மில் வளர்க்கும் மரங்களின் வேகம் அபரிமிதமாக இருக்கிறது. சில மரங்கள் மண்ணில் வைத்தால் 5 ஆண்டுகளில் காய் காய்க்கும். ஆனால் பிளாஸ்டிக் டிரம்களில் இரண்டே ஆண்டுகளில் காய்த்து விடுகிறது. மொட்டைமாடியில் நல்ல சூரிய ஒளியில் இருப்பதால் தினசரி இரண்டு நேரமும் தண்ணீர் பாய்ச்சுவது கட்டாயம். சாணம் உரம், வேப்பம் புண்ணாக்கு, நாட்டுச் சர்க்கரை, எலும்புப்பொடி ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் இயற்கை உரங்களை தண்ணீருடன் கலந்து தெளிக்கிறேன்.

மொட்டைமாடி என்பதால் மரங்கள் ரொம்பவும் அடர்த்தியாக வளர விட்டுவிடக் கூடாது. இதனால் 7 அடி தாண்டி வளராமல் அடுக்கடி கவாத்து செய்து கொண்டே இருக்க வேண்டும். இவ்வாறு அப்துரசாக் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x