Published : 23 Mar 2022 05:48 AM
Last Updated : 23 Mar 2022 05:48 AM
புதுடெல்லி: தேசிய நெடுஞ்சாலைகளில் 60 கி.மீ.க்கு ஒரு சுங்கச்சாவடி மட்டுமே செயல்படும். கூடுதலாக சுங்கச்சாவடிகள் இருந்தால் அடுத்த 3 மாதங்களில் மூடப்படும் என்று மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ் சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
மக்களவையில் நேற்று நெடுஞ்சாலை துறைக்கான திட்டங்கள் குறித்த கேள்விகளுக்குபதில் அளித்து கட்கரி பேசியதாவது: நாடு முழுவதும் நடந்து வரும் பல்வேறு தேசிய நெடுஞ்சாலை திட்டப் பணிகள் வரும் 2024-க்குள் நிறைவடையும். அப்போது அமெரிக்க சாலைகளுக்கு இணையாக இந்திய சாலைகளின் கட்டமைப்பு மேம்படும். ஜம்மு-காஷ்மீரில் ரூ.7,000 கோடி திட்டப் பணிகளால் நகர்- மும்பை இடையிலான பயண நேரம் 20 மணி நேரமாக குறைக்கப்படும்.
டெல்லி-ஜெய்ப்பூர், டெல்லி-ஹரித்வார், டெல்லி-டேராடூன் நகரங்களுக்கு இடையிலான பயண நேரத்தில் 2 மணி நேரமும் டெல்லி- அமிர்தசரஸ் பயண நேரத்தில் 4 மணி நேரமும் டெல்லி-பெங்களூரு பயண நேரத்தில் 2 மணி நேரமும் குறையும்.
தேசிய நெடுஞ்சாலைகளில் 60 கி.மீ.க்கு ஒரு சுங்கச்சாவடி மட்டுமே செயல்படும். கூடுதலாக சுங்கச்சாவடிகள் இருந்தால் அடுத்த 3 மாதங்களில் மூடப்படும். சுங்கச்சாவடிகளுக்கு அருகே வசிப்பவர்கள் ஆதார் அட்டையை காண்பித்தால் அவர்கள் சுங்கச்சாவடியை கடக்க "பாஸ்" வழங்கப்படும்.
தமிழக மாதிரி திட்டம்
இந்தியாவில் ஓராண்டில் ஏற்படும் சாலை விபத்துகளில் சுமார் 1.5 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். விபத்துகளை தடுத்து, உயிர்களை காக்க அனைத்து கார்களிலும் 6 "ஏர் பேக்" இருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. உலக வங்கியுடன் இணைந்து தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன்காரணமாக தமிழகத்தில் விபத்துகளை குறைப்பதில் ஓரளவுக்கு வெற்றி கிடைத்துள்ளது. தமிழக மாதிரி திட்டம், நாடு முழுவதும் செயல்படுத்தப்படும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார். இந்த அறிவிப்பு மூலம் ஏராளமான சுங்கச்சாவடிகள் அகற் றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT