Published : 22 Mar 2022 08:12 AM
Last Updated : 22 Mar 2022 08:12 AM
ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்ட 29 பழங்கால அரிய கலைப் பொருட்களை பிரதமர் மோடி பார்வையிட்டார். இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட சிலைகள் உட்பட 29 பழங்காலப் பொருட்களை ஆஸ்திரேலி யாவில் இருந்து மத்திய அரசு மீட்டுள்ளது. இந்த பழங்காலப் பொருட்கள் ராஜஸ்தான், குஜராத்,மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், தெலங்கானா, தமிழ்நாடு, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களை சேர்ந்தவை.
ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்டு இந்தியா கொண்டுவரப்பட்ட 29 பொருட்களும் சிவன், சக்தி, விஷ்ணு, ஜெயின் பாரம்பரியம், உருவப்படங்கள் மற்றும் அலங்கார பொருட்கள் என ஆறு வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த பழங்கால பொருட்களும் மணற்கல், பளிங்கு, வெண்கலம், பித்தளை, காகிதம் போன்றபொருட்களால் செய்யப்பட்டுள்ளன. இந்த பொருட்களை டெல்லியில் பிரதமர் மோடி பார்வையிட்டார்.
இதனிடையே, இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான உச்சி மாநாடு காணொலிக் காட்சி மூலம்நேற்று நடைபெற்றது. ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசனுடன் பிரதமர் மோடி காணொலிக் காட்சி மூலம் பேசினார். அப்போது, இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட பழங்காலப் பொருட்களை திருப்பி அனுப்பியதற்காக ஸ்காட் மோரிசனுக்கு இந்தியர்கள் அனைவரின் சார்பிலும் பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார். இந்தியா -ஆஸ்திரேலியா இடையிலான ஒத்துழைப்பு வேகமாக வளர்ந்து வருவதாகவும் மோடி கூறினார்.
மேலும், இந்தோ - பசிபிக் பகுதியின் வளர்ச்சியில் இரு நாடுகளும் இணைந்து தொடர்ந்து கவனம் செலுத்துவது, ஐரோப்பாவில் நிலவும் பதற்றமான சூழல்ஆகியவை குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.
- பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT