Published : 21 Mar 2022 03:32 PM
Last Updated : 21 Mar 2022 03:32 PM
மங்களுரூ: இந்துக்கள் ஒன்றிணைந்தால், 'பக்வா த்வாஜ்' (காவிக் கொடி) நாட்டின் தேசிய கொடியாக மாறும் என சர்ச்சை ஏற்படுத்தும் விதமாக ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர்களுள் ஒருவரான கல்லாட்கா பிரபாகர் பட் தெரிவித்துள்ளார்.
இந்துக்களின் ஒற்றுமையை வலியுறுத்தி, மங்களூருவின் புறநகரில் உள்ள குட்டார் பகுதியில் இருக்கும் விஷ்வ இந்து பரிஷித் (விஎச்பி)-ன் கர்னிக்கா கோரகஜ்ஜா ஆலையம் சார்பில் மாபெரும் பாத யாத்திரைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆர்எஸ்எஸ் தலைவர் கல்லாட்கா பிரபாகர் பட் பேசுகையில், "என்றாவது ஒருநாள் காவிக்கொடி நமது தேசியக் கொடியாக மாறலாம். இந்துக்கள் அனைவரும் ஒன்றிணைந்தால் இது நடக்கும். நடக்க வேண்டும். தற்போது இருக்கும் மூவர்ணக் கொடிக்கு முந்தையக் கொடி எது. பிரிட்டிஷாரின் கொடி இருந்தது. நமது நாட்டின் கொடியாக பச்சை வர்ண நட்சத்திரமும் சந்திரனும் இருந்தது.
நாடாளுமன்றத்திலும், மாநிலங்களவையிலும் பெரும்பான்மையான மக்கள் தேசியக் கொடியை மாற்ற வேண்டும் என்று வாக்களித்தால், தேசியக் கொடியை மாற்றலாம். சிறுபான்மையினரை திருப்தி படுத்த இறுதி செய்யப்பட்டதாக கூறும் தேசியக் கொடியை நான் மதிக்கிறேன். இதே போல தான் வந்தேமாதரம் நிராகரிக்கப்பட்டப் பின்னரே தேசிய கீதம் அங்கீகரிக்கப்பட்டது.
தற்போது சர்ச்சையாகி இருக்கும் ஹிஜாப் பிரச்சினை ஜிகாத்தின் மற்றொரு வடிவமே. பாப்புலர் ஃப்ரெண்ட் ஆப் இந்தியா போன்ற அமைப்புகளால், கிதாப்புக்குப் பதிலாக ஹிஜாப் அணிய மாணவிகள் ஊக்குவிக்கப் படுகிறார்கள். விளையாட்டு வீராங்கனை சனியா மிர்சா, எழுத்தாளர் சாரா அபூபக்கர் போன்றவர்கள் ஹிஜாப்புக்கு எதிராக இருக்கும் போது, மாணவிகள் வகுப்பறையில் ஹிஜாப் அணிய வலியுறுத்தப்படுவது விசித்திரமாக இருக்கிறது. ஹிஜாப் விவகாரம் குறித்து கர்நாடாக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக, சமீபத்தில் முஸ்லிம் வியாபாரிகள் கடையடைப்பு நடத்தியிருப்பது வகுப்புவாத மோதலைத் தூண்டும் செயல், இது தேசத்துரோகத்திற்கு சமம்.
குஜராத்தில், ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையில் பகவத் கீதையை கற்பிக்கும் அந்த மாநில அரசின் முடிவு பாராட்டப்பட வேண்டிய ஒன்று. பகவத்கீதை பள்ளிகளில் கற்பிற்கப்பட வேண்டும். குரான் மற்றும் பைபிள் ஆகியவை வீடுகளில் கற்பிக்கப்பட வேண்டும்
ஹிஜாபிற்கு திரும்ப வேண்டிய அவசியம் எதுவும் இல்லை. அனைவரும் ஒன்றாக சேர்ந்து படிக்க வேண்டும்" இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT