Published : 21 Mar 2022 10:15 AM
Last Updated : 21 Mar 2022 10:15 AM

உக்ரைனில் உயிரிழந்த இந்திய மாணவர் உடல் தாயகம் கொண்டுவரப்பட்டது: முதல்வர் பசவராஜ் அஞ்சலி

உக்ரைனில் உயிரிழந்த மருத்துவ மாணவர் நவீன் சேகரப்பா | கோப்புப் படம்

பெங்களூரு: உக்ரைனில் ரஷ்ய தாக்குதலில் உயிரிழந்த இந்திய மருத்துவ மாணவர் நவீன் சேகரப்பாவின் உடல் தாயகம் கொண்டுவரப்பட்டது. விமான நிலையத்தில் அவரது உடலுக்கு கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை மற்றும் உயரதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்.

கர்நாடக மாநிலம் ஹாவேரியைச் சேர்ந்த நவீன் சேகரப்பா (வயது 21). இவர் உக்ரைனின் கார்கிவ் நகரில் உள்ள கார்கிவ் தேசிய பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு மருத்துவம் பயின்று வந்தார். இந்நிலையில் கடந்த மார்ச் 1 ஆம் தேதி கார்கிவ் நகரில் சிக்கியிருந்த நவீன் சேகரப்பா ஒரு மளிகைக் கடைக்கு வெளியே நின்று கொண்டிருந்தபோது ரஷ்ய குண்டு வீச்சில் சிக்கி உயிரிழந்தார்.

அவரது உடலைப் பெற்றுத்தருமாறு அவரது பெற்றோர் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் அவரது உடல் இன்று (மார்ச் 21) உக்ரைனிலிருந்து இந்தியா கொண்டு வரப்பட்டது. பெங்களூரு விமான நிலையத்தில் இறந்த மாணவர் நவீன் குடும்பத்தினருடன் முதல்வர் பசவராஜ் பொம்மை மற்றும் அதிகாரிகள், மலர்வளையம் வைத்து நவீன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பசவராஜ் பொம்மை, நவீன் சேகரப்பாவின் உடலை தாயகம் கொண்டுவர மத்திய அரசு மேற்கொண்ட முயற்சிகளுக்கு நன்றி தெரிவிப்பதாகக் கூறினார்.

மாணவர் நவீன் மறைவையடுத்து அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவதாக முதல்வர் பசவராஜ் பொம்மை உறுதியளித்திருக்கிறார். அந்தக் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மகனின் உடல் தானம்: முன்னதாக கடந்த சனிக்கிழமை நவீனின் தந்தை சங்கரப்பா மாணவர் நவீனின் உடலை மருத்துவ ஆராய்ச்சிக்கு தானமாக அளிப்பதாகக் கூறியிருந்தார். "என் மகன் மருத்துவராக விரும்பினார். ஆனால் அவர் இப்போது உயிரோடு இல்லை. அவரது உடலாவது மருத்துவ மாணவர்களுக்கு பயனுள்ளதாக அமையட்டும் என்று முடிவு செய்துள்ளோம். நவீனின் உடலை மருத்துவ ஆராய்ச்சிக்காக வழங்கவுள்ளோம்" என்று அவர் கூறியிருந்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

மாணவர் நவீனின் உடலுக்கு அவரது குடும்பத்தினர் இறுதிச் சடங்குகளை செய்து உடலை முறைப்படி மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்கவிருப்பதாகத் தெரிகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x