Published : 21 Mar 2022 07:31 AM
Last Updated : 21 Mar 2022 07:31 AM

லாலுவின் ஆர்ஜேடி கட்சியுடன் இணைந்தது எல்ஜேடி: 25 ஆண்டுகளுக்கு பின் சரத்யாதவ் முடிவு

சரத்யாதவ்

புதுடெல்லி: லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளத்துடன் (ஆர்ஜேடி) சரத் யாதவின் லோக்தந்த்ரிக் ஜனதா தளம் கட்சி (எல்ஜேடி) நேற்று டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் முறைப்படி இணைந்தது.

லோக்தந்த்ரிக் ஜனதாதளம் கட்சியின் தலைவரான சரத் யாதவ்,தனது கட்சியை லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளத்துடன் இணைக்கப் போவதாக அறிவித்தார். அதன்படி, டெல்லியி்ல் நேற்று நடந்த நிகழ்ச்சியில் ராஷ்ட்ரீய ஜனதாதளத்துடன் லோக்தந்த்ரிக் ஜனதா தளம் கட்சியின் இணைப்பு முறைப்படி நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் சரத் யாதவ் பேசும்போது, ‘‘இப்போதைய நிலையில், மதவாத சக்திகளை எதிர்க்க நாட்டில் பலமான எதிர்க்கட்சி தேவைப்படுகிறது. மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்ற நோக்கத்திலும் ஜனதா தளம் கட்சியில் இருந்து பிரிந்துசென்ற பலரும் ஒன்றாக சேரவேண்டும் என்ற அடிப்படையிலும் லோக்தந்த்ரிக் ஜனதா தளம் கட்சியை ராஷ்ட்ரீய ஜனதா தளத்துடன் இணைக்க முடிவுசெய்தேன். இப்போது இளைஞர்கள் தேவைப்படுகிறார்கள். லாலு பிரசாத்தின் மகன் தேஜஸ்வி யாதவ்தான் நமது எதிர்காலம். மதச்சார்பற்ற சக்திகள் இணைந்து போராட சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவுடன் பேசுவேன்’’ என்றார்.

தேஜஸ்வி அழைப்பு

தேஜஸ்வி யாதவ் பேசுகையில், ‘‘நாட்டில் மத வெறுப்புணர்வும் பகைமையும் தூண்டப்படுகிறது. வேலையில்லாத் திண்டாட்டமும் வறுமையும் அதிகரிக்கிறது. எங்கள் கட்சியில் இணைய சரத் யாதவ் முடிவு செய்தது ராஷ்ட்ரீய ஜனதா தளத்தை வலுப்படுத்தும். மதச்சார்பற்ற சக்திகள் ஓரணியில் திரள வேண்டும்’’ என்றார்.

மத்தியில் வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது ஜனதா தளம் கட்சியில் லாலு பிரசாத் யாதவும் சரத் யாதவும் இருந்தனர். பின்னர், ஜனதா தளம் கட்சி பிளவுபட்டு லாலு பிரசாத்தும் சரத் யாதவும் பிரிந்தனர்.

லாலு பிரசாத் ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சியைத் தொடங்கினார். சரத் யாதவ் ஐக்கிய ஜனதாதளம் கட்சியைத் தொடங்கினார்.

பின்னர், பிஹார் முதல்வர் நிதிஷ்குமாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஐக்கிய ஜனதா தளத்தில் இருந்து வெளியேறி லோக்தந்த்ரிக் ஜனதாதளம் கட்சியை 2018-ல் சரத் யாதவ் தொடங்கினார்.

லாலு பிரசாத் யாதவுடன் நெருக்கமாகி 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பிஹாரில் மாதேபுரா தொகுதியில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் சார்பில் போட்டியிட்ட சரத் யாதவ் தோல்வியடைந்தார். தனது கட்சியை ராஷ்ட்ரீய ஜனதா தளத்துடன் இணைக்கப் போவதாக சரத் யாதவ் ஏற்கெனவே அறிவித்த நிலையில், நேற்று முறைப்படி தனது கட்சியை ராஷ்ட்ரீய ஜனதா தளத்தில் இணைத்துள்ளார். 25 ஆண்டுகளுக்குப் பின் லாலு பிரசாத் யாதவும் சரத் யாதவும் ஒன்றாக இணைந்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x