Published : 20 Mar 2022 07:24 PM
Last Updated : 20 Mar 2022 07:24 PM
பெங்களூரு: ஹிஜாப் விவகாரத்தில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளுக்கு ஓய் பிரிவு பாதுகாப்பு வழங்க கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.
"ஹிஜாப் அணிவது இஸ்லாம் மத நம்பிக்கையின்படி அத்தியாவசியமான பழக்கவழக்கம் அல்ல. மேலும், இது அரசியல் சாசனத்தின் சட்டப்பிரிவு 25 வழங்கும் மத உரிமையின் கீழ் வரவில்லை. அதனால், கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை செல்லும்" என்று கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இந்தநிலையில் கர்நாடகாவில் உமாபதி என்ற வழக்கறிஞருக்கு வாட்ஸ் ஆப் மூலம் வந்த வீடியோ ஒன்றில் தலைமை நீதிபதி ரிது ராஜ் அஸ்வதிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. இதனை, அவர் உயர்நீதிமன்ற பதிவாளரின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.
இதன் அடிப்படையில், அடையாளம் தெரியாத நபர் மீது கர்நாடக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கூறியதாவது: ஹிஜாப் விவகாரத்தில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளுக்கு ஓய் பிரிவு பாதுகாப்பு வழங்க முடிவு செய்துள்ளோம். நீதிபதிகளுக்கு மிரட்டல் விடுத்தது தொடர்பாக விதான் சவுதா காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT