Published : 18 Mar 2022 01:33 PM
Last Updated : 18 Mar 2022 01:33 PM

தமிழக அரசின் கடன் ரூ. 6,53,348.73 கோடியாக இருக்கும்: தமிழக நிதியமைச்சர்  தகவல்

தமிழக கடன்: பிரதிநிதித்துவப் படம்

சென்னை: 2023 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் நாளது வரையிலான நிலுவைக் கடன், மத்திய அரசிடமிருந்து சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீட்டுத் தொகைக்கு மாறாக கடனாக பெறப்பட்ட தொகை நீங்கலாக 6,53,348.73 கோடி ரூபாயாக இருக்கும் என தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.

சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த ஜன.5-ம் தேதி தொடங்கி வைத்தார். திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக 2022-23 நிதி ஆண்டுக்கான முழுமையான பட்ஜெட் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இதனை தாக்கல் செய்தார். பட்ஜெட் உரையில் பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. அவர் கூறியதாவது:

2022-23 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்ட மதிப்பீட்டில் வருவாய்ப் பற்றாக்குறை 52,781.17 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2021-22 ஆம் ஆண்டு திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீட்டில் மதிப்பிடப்பட்ட வருவாய்ப் பற்றாக்குறை தொகையான 55,272.79 கோடி ரூபாயைக் காட்டிலும் குறைவானதாகும்.

வருவாய்ப் பற்றாக்குறையை முறையாக குறைப்பதன் மூலம் வருவாய்ப் பற்றாக்குறை இல்லாத நிலையை அடைவதற்கும், தமிழ்நாடு நிதி நிலை நிருவாகப் பொறுப்புடைமைச் சட்டத்தில் கூறப்பட்ட நெறிமுறைகளை பின்பற்றி, நிதிநிலை மேம்பாடு மற்றும் கடன் தாங்குதன்மையை உறுதி செய்யும் வகையிலும் இடைக்கால நிதி நிலவரத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

வருவாய் மற்றும் செலவினங்களுக்கிடையே சமநிலையைப் பேணுவதன் மூலம் இந்த நிலையை அடைய எண்ணப்பட்டுள்ளது. இதற்காக வருவாய் ஆதாரங்களை மேம்படுத்த தேவையான வழிமுறைகளை ஆராய முன்னுரிமை வழங்கப்படும். மேலும் வளர்ச்சிக்கான செலவினங்களுக்கு அதிகமாக ஒதுக்கீடு செய்வது மற்றும் வருவாய் செலவினங்களை சரியான முறையில் பயன்படுத்தும் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு செலவினங்களுக்குரிய தரத்தை மேம்படுத்த எண்ணப்பட்டுள்ளது.

வருவாய்ப் பற்றாக்குறை 2022-23 ஆம் ஆண்டில் 26,313.15 கோடி ரூபாயாகவும், 2023-24 ஆம் ஆண்டில் 13,582.94 கோடி ரூபாயாக மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மூலதனச் செலவிற்கு அதிக இடம் தரும் வகையில் உள்ளது.

15வது நிதிக்குழு, நிதிப்பற்றாக்குறைக்கும் மாநில மொத்த உற்பத்தி மதிப்பீட்டிற்கும் உள்ள விகிதத்தை 2023-24 ஆம் ஆண்டில் 3.0 சதவீதமாகவும் 2024-25 ஆம் ஆண்டில் 3.0 சதவீதமாகவும்

பராமரிப்பதற்கு மாநில அரசுகளுக்கு அனுமதி அளித்துள்ளது. மேலும், மின்துறை சீர்திருத்தங்களை நிறைவேற்றும்பொருட்டு 2021-22 ஆம் ஆண்டு முதல் 2024-25 ஆம் ஆண்டு வரை மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் 0.5 சதவீதம் கூடுதலாக பெறுவதற்கு வழிவகை செய்துள்ளது.

2022-23 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளில் மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் நிதிப்பற்றாக்குறை விகிதம் 3.63 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. வரும் ஆண்டுகளில் மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் நிதிப் பற்றாக்குறை விகிதம் 2023-24 ஆம் ஆண்டில் 3.17 சதவீதம் மற்றும் 2024-25 ஆம் ஆண்டில் 2.91 சதவீதமாக இருக்கும். இது 15வது நிதிக்குழு பரிந்துரைத்த இலக்கிற்குள் உள்ளது.

கடன்கள்

மத்திய அரசு நிர்ணயிக்கும் ஒட்டுமொத்தக் கடன் வரம்பின் அடிப்படையில், கடன் வரவுகள் மற்றும் திரும்பச் செலுத்துதல் மதிப்பிடப்பட்டுள்ளன. 2022-23 ஆம் ஆண்டில் மாநில அரசு 90,116.52 கோடி ரூபாய் அளவிற்கு நிகரக் கடன் பெற திட்டமிட்டுள்ளது. இதில் சரக்குகள் மற்றும் சேவைவரி இழப்பீட்டிற்கு ஈடாக மத்திய அரசால் வழங்கப்பெறுமென எதிர்பார்க்கப்படும் 6,500.00 கோடி ரூபாய் அடங்காது.

2023 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் நாளது வரையிலான நிலுவைக் கடன், மத்திய அரசிடமிருந்து சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீட்டுத் தொகைக்கு மாறாக கடனாக பெறப்பட்ட தொகை நீங்கலாக 6,53,348.73 கோடி ரூபாயாக இருக்கும். இது, 2022-23 ஆம் ஆண்டு மாநில மொத்த உற்பத்தி மதிப்பீட்டில் 26.29 சதவீதமாக இருக்கும். மாநில மொத்த உற்பத்தி மதிப்பீட்டின் சதவீதத்தில் நிலுவையிலுள்ள மொத்தக் கடன் 2023-24 ஆம் ஆண்டில் 26.24 சதவீதமாகவும், 2024-25 ஆம் ஆண்டில் 25.93 சதவீதமாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது 15-வது நிதிக்குழு பரிந்துரைத்த இலக்கிற்குள் உள்ளது. இவ்வாறு, நிதி மேலாண்மையின் ஒரு பகுதியாக கடன் தாங்குதன்மை இருக்க வேண்டும் என்பது மாநில அரசின் நோக்கமாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x