Published : 18 Mar 2022 10:01 AM
Last Updated : 18 Mar 2022 10:01 AM
புதுடெல்லி: வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த தேவைப்பட்டால் ஆம் ஆத்மி தலைமையையும் காங்கிரஸ் ஏற்கும் எனக் கூறியுள்ளார் காங்கிரஸின் மூத்த தலைவரும் முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம்.
ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்துள்ளது. இதனால் அந்த மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் பதவி விலகியுள்ளனர். இந்நிலையில் தனியார் ஆங்கில தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்துள்ளார். அதில் காங்கிரஸ் தலைவர் தேர்தல், காங்கிரஸின் பலவீனம், காங்கிரஸ் செய்ய வேண்டிய மீள் கட்டமைப்புப் பணிகள் எனப் பலவற்றையும் குறித்து விரிவாகப் பேசியுள்ளார். ஜி 23 என்ற காங்கிரஸின் மூத்த தலைவர்களின் கூட்டம் நடைபெற்ற நிலையில் சிதம்பரத்தின் பேட்டி கவனம் பெறுகிறது.
அந்தப் பேட்டியில் ப.சிதம்பரம், "5 மாநில தேர்தல் தோல்விக்குப் பின்னர் காங்கிரஸ் தலைமைப் பொறுப்புகளில் இருந்து விலக சோனியா காந்தி, ராகுல் மற்றும் பிரியங்கா காந்தி முன்வந்தனர். ஆனால், காங்கிரஸ் காரிய கமிட்டி அதை ஏற்றுக் கொள்ளவில்லை. காங்கிரஸ் கட்சிக்கு புதிய நிரந்தரத் தலைமையைத் தேர்வு செய்ய வேண்டும் என்பதே காரிய கமிட்டியின் விருப்பமும் கூட. அந்தத் தேர்தல் நடைபெற அதிகபட்சம் ஆகஸ்ட் வரை ஆகலாம். அதுவரை என்ன செய்யப்போகிறோம் என்பது முக்கியமானது. அதுவரை சோனியா காந்தி தலைமையில் தான் நாங்கள் பணியாற்றப் போகிறோம். ஜி 23 தலைவர்கள் காந்தி குடும்பத்தினர் தலைமைப் பதவியை விட்டுக் கொடுக்க வேண்டும் என்று கூறுகின்றனர். என்னைப் பொறுத்த வரை காந்தி குடும்பத்தினரை மட்டுமே தேர்தல் தோல்விக்குக் கைகாட்டுவது சரியல்ல. அவர்கள் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர்.
இங்கு யாருமே பொறுப்பைத் தட்டிக் கழிக்கவில்லை. ஆனால் பொறுப்பு என்பது சோனியா, பிரியங்கா, ராகுல் மீது மட்டுமில்லை ஒவ்வொரு மாநிலம், மாவட்டம், வட்டம் என அனைத்து காங்கிரஸ் உறுப்பினர் மீது உள்ளது. அதனால் இந்தத் தேர்தல் தோல்விக்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமையகம் மட்டுமே பொறுப்பாகாது. இப்போதே நிரந்தரத் தலைவரை அறிவிக்கக் கோருகிறார்கள். நாங்கள் ஆகஸ்டில் தேர்தல் நடத்தி அறிவிப்போம் என்கிறோம். ஆகஸ்டில் கட்சிக்கு நிரந்தரத் தலைமை கிடைக்கும் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை. ஆகையால் இப்போது முதல் ஆகஸ்ட் வரை காங்கிரஸ் கட்சியில் விரிவான சீர்த்திருத்தங்களை செய்ய வேண்டும். அதற்குள் கட்சியில் பிளவு ஏதும் ஏற்படாது என்று நான் நம்புகிறேன். ஜி 23 தலைவர்களிடம் கட்சியை பிளவு செய்துவிட வேண்டாம் என்றும் நான் கோரிக்கை வைக்கிறேன்.
2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த காங்கிரஸ் நிச்சயமாக சில விஷயங்களில் இறுக்கத்தைத் தளர்த்தி வளைந்து நெளிந்து கொடுத்தே போக வேண்டும். இது மம்தாவுக்கும் கேஜ்ரிவாலுக்கும் கூட பொருந்தும். ஒவ்வொரு மாநில வாரியாக பாஜக எதிர்ப்பு அணியை வலுப்படுத்த வேண்டும். மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸுடன் இணைந்து பாஜகவை எதிர்க்க வேண்டியுள்ளது. பஞ்சாப்பில் ஆம் ஆத்மி தலைமையின் கீழ் நாங்கள் பாஜகவை எதிர்க்கத் தயாராக உள்ளோம். இது மாதிரி ஒவ்வொரு மாநிலத்திலும் எதிர்ப்பை வலுப்படுத்தினால் பாஜகவை வீழ்த்துவது எளிதாகும்.
காங்கிரஸின் பலவீனமாக நான் பார்ப்பது மாநில அளவிலான பலவீனங்களே. நிறைய மாநிலங்களில் காங்கிரஸ் சிதிலமடைந்துள்ளது. அங்கெல்லாம் காங்கிரஸ் கமிட்டிகளை கலைத்துவிட்டு முழுமையாக புதியதாக வட்ட அளவிலிருந்து கட்சியைக் கட்டமைக்க வேண்டும். இந்த அமைப்பு சார்ந்த பலவீனத்தை நான் தலைமையிடம் எடுத்துரைத்துள்ளேன். இதையே ஜி 23யின் குலாம் நபி ஆசாத்தும், கபில் சிபலும் கூட வலியுறுத்துகின்றனர்.
நிறைய இடங்களில் காங்கிரஸுக்கு தலைவர்களே இல்லை. வெறும் தொண்டர்கள் தான் இருக்கின்றனர். அரசியலில் ஈடுபாடு கொண்ட, தேர்தல் அரசியலில் ஈடுபடும் நேர்த்தி கொண்ட தலைவர்களை அடையாளம் கண்டு கட்சிப் பொறுப்புகளில் அமர்த்த வேண்டும். அனைத்து மாநிலங்களில் கட்சிக்காக 24/7 நேரம் உழைக்கும் தலைவர்கள் வேண்டும். மிக முக்கியமான அவர்கள் 40, 50 அதிகபட்சமாக 60 வயதைத் தாண்டாதவர்களாக இருக்க வேண்டும். அதே போல் வட்ட அளவிலிருந்து காங்கிரஸ் நிர்வாகிகள் சிறப்பாகப் பணியாற்ற வேண்டும் என்றால் கட்சி கட்டமைப்புப் பணிக்காக நிதி ஆதாரம் வேண்டும். எல்லா இடங்களுக்கும் நிதி சென்று சேர்ந்தால் தான் மீள் கட்டமைப்பு சாத்தியமாகும்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT