Published : 17 Mar 2022 10:00 PM
Last Updated : 17 Mar 2022 10:00 PM
புதுடெல்லி: வங்காள விரிகுடாவில் புயல் உருவாக உள்ளதாக வெளியிடப்பட்டுள்ள எச்சரிக்கையைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட துறை மற்றும் நிர்வாகங்களின் தயார் நிலையை மத்திய உள்துறை செயலாளர் ஆய்வு செய்தார்.
இது குறித்து மத்திய அரசு வெளியிடப்பட்டுள்ள தகவலில், வங்காள விரிகுடாவில் புயல் எச்சரிக்கை விடப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, மத்திய அமைச்சகங்கள் / முகமைகள் மற்றும் அந்தமான் & நிக்கோபார் யூனியன் பிரதேச நிர்வாகம் ஆகியவற்றின் தயார் நிலையை மத்திய உள்துறைச் செயலாளர் அஜய் குமார் பல்லா இன்று (வியாழக்கிழமை) ஆய்வு செய்தார்.
நிலைமையைத் தொடர்ந்து கண்காணிக்குமாறும் எந்தச் சூழலையும் எதிர்கொள்ளும் விதமாக அந்தமான் & நிக்கோபார் நிர்வாகத்துடன் தொடர்பில் இருக்கவும் மத்திய அமைச்சகங்கள் மற்றும் முகமைகளை மத்திய உள்துறை செயலாளர் அறிவுறுத்தினார்.
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மார்ச் 21-ம் தேதிக்குள் சூறாவளிப் புயலாக வலுப்பெறும் என்றும், மணிக்கு 70-80 கிமீ வேகத்தில் இருந்து மணிக்கு 90 கிமீ வேகம் வரை காற்று வீசக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில் இந்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
தேசியப் பேரிடர் மீட்புப் படையின் ஒரு குழு ஏற்கெனவே போர்ட் பிளேயரில் இருக்கும் நிலையில், தேவைப்பட்டால் கூடுதல் குழுக்கள் விமானம் மூலம் செல்லத் தயாராக உள்ளன. போதுமான அளவு அவசரகாலப் பொருட்களுடன் அந்தமான் & நிக்கோபார் நிர்வாகம் தயாராக உள்ளது. மக்களைப் பாதுகாக்கவும், உள்கட்டமைப்பை விரைந்து சீர்படுத்தவும் நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
மீன்பிடித்தல், சுற்றுலா மற்றும் கப்பல் போக்குவரத்து நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளதுடன், கடலில் மீன்பிடிக்கச் சென்றுள்ள மீனவர்கள் வீடு திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்திய ராணுவம், இந்திய கடற்படை, இந்திய விமானப்படை மற்றும் இந்திய கடலோரக் காவல்படை குழுக்கள் தயார் நிலையில் உள்ளன. மேலும், தேவைப்பட்டால் உதவ மத்திய அமைச்சகங்களும் தயாராக உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment