Published : 16 Mar 2022 12:33 PM
Last Updated : 16 Mar 2022 12:33 PM
புதுடெல்லி: மத்திய பொது பட்ஜெட்டில் வடக்கு ரயில்வேக்கு ரூ.13,200 கோடியும், தெற்கு ரயில்வேக்கு வெறும் ரூ.59 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மீது மக்களவையில் அதன் திமுக துணைத் தலைவர் கனிமொழி கருணாநிதி கேள்வி எழுப்பினார்.
பட்ஜெட் மீதான விவாதத்தில் தூத்துக்குடி தொகுதியின் திமுக எம்.பியுமான கனிமொழி கருணாநிதி நேற்று மக்களவையில் பேசுகையில், "ரயில்துறையில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது என்பதை மறுக்கவில்லை. ஆனால், இன்னும் நிறைய செய்திருக்க வேண்டும். 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த அரசாங்கத்தை குறை சொல்லவோ இன்று வேறொருவர் மீது அதை பொறுப்பாக்கவோ கூடாது.
முக்கியமான பொருளாதார உள்கட்டமைப்புகள் எப்போதும் அரசால் கட்டமைக்கப்படுகிறது. ரயில்வேயில் ரூ,1 முதலீடு செய்தால் ரூ.5 வருமானம் ஈட்டுகிறது என்று பொருளாதார ஆய்வு கூறுகிறது. இது ரயில்வே உள்கட்டமைப்பில் பொதுப் பணத்தை முதலீடு செய்வதில் ஒரு தெளிவான நன்மை ஆகும். ஆனால், மத்திய அரசு ரயில்வே துறையை மீண்டும், மீண்டும் புறக்கணிக்கிறது. ரயில்வே துறைக்கு பட்ஜெட், மத்திய அரசு, ரயில்வே சொந்த உள் நிதி ஆகிய மூன்று வெவ்வேறு ஆதாரங்களில் இருந்து நிதி அளிக்கப்படுகிறது.
2022-23-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் மதிப்பீடு ரு.2.45 லட்சம் கோடியாகும். கடந்த ஆண்டு இது ரூ.2.15 லட்சம் கோடியாக இருந்தது. வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளோடு திருத்தப்பட்ட மதிப்பீடு பொருந்தவில்லை. பணிகள் செய்யப்பட்டிருக்கின்றன. ஆனால், நிதி பயன்படுத்தப்படவில்லை. கடந்த மூன்று ஆண்டுகளில் ரயில்வேயின் நிதிச் செயல்பாடுகள் அதை வெளிப்படுத்துகின்றன. இதற்கானக் காரணங்களை அறிய விரும்புகிறேன். இன்று நாம் தனியார்மயமாக்கலைப் பற்றி பேசுகிறோம். எல்லோரும் தனியார்மயமாக்கலை ஏற்று மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார்கள். டெல்லி மெட்ரோ - விமான நிலையத்துக்கான தனியார் கடைசி நிமிடத்தில் பணிகளை கைவிட்டபோது, ரயில்வே நிர்வாகம் அதை எடுத்து முடிக்க வேண்டியிருந்தது.இதைத்தான் தனியாரால் செய்ய முடியும். எனவே, அதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
லாபம் தனியாருக்கு; நட்டம் ரயில்வே துறைக்கா? ரயில்வேக்கு நடக்கும் சிறந்த விஷயம் என்றால், அதை தனியார் நிறுவனங்களுக்குக் கொடுத்து விட்டு அதிலிருந்து விலகிச் செல்வது என்று நினைக்கக் கூடாது என்பதுதான். 2031 ஆம் ஆண்டுக்குள் அனைத்து சரக்கு ரயில்களும் தனியார்மயமாக்கப்படும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அத்துடன் 30 சதவீதம், அதாவது 750 ரயில்வே நிலையங்கள் தனியார்மயமாக்கப்படும் என்று சொல்லப்பட்டுள்ளது. லாபம் ஈட்டும் ஏ.சி. ரயில்வே பெட்டிகளும் தனியார் மயமாக்கப்படுகின்றன. இரண்டாம் வகுப்பு பெட்டிகளை ரயில்வே இன்னும் விட்டு வைத்திருக்கிறது. நன்றாக லாபம் ஈட்டும் ரயில்களில் மட்டும் தனியார்கள் முதலீடு செய்கிறார்கள். ஆனால், ஓட்டுநர், கார்டு, லைன் பணியாளர்கள் என எல்லோரும் ரயில்வே துறையைச் சேர்ந்தவர்கள்.
ரயில்வே துறைதான் ரயில்வே நிலையங்களையும் பராமரிக்கிறது. ரயில்வே டிக்கெட் முன்பதிவும் ஐஆர்சிடிசி.,யால் செய்யப்படுகிறது. ஆனால், இந்திய ரயில்வே நஷ்டத்தை ஏற்படுத்தும் ரயில்களை மட்டும் இயக்குகிறது. லாபம் ஈட்டும் ரயில்கள் எல்லாம் தனியாரால் இயக்கப்படுகின்றன.
லாபத்தை எல்லாம் தனியாருக்கு கொடுத்துவிட்டு, நஷ்டத்தை மட்டும் ஏன் நீங்கள் எடுத்துக்கொள்கிறீர்கள். லாபத்தை தவிர்த்து எந்தப் பொறுப்பும் தனியாருக்கு கிடையாது என்றால், அந்தத் திட்டத்தை கைவிடுங்கள். 2030-ஆம் ஆண்டுக்குள் 8,400 டன் மெட்ரிக் சரக்கு இயக்கத்தை அடைய இலக்கு வைத்திருக்கிறீர்கள். ஆனால், இன்று நாட்டின் மொத்த சரக்குப் போக்குவரத்தில் 26 சதவீதம் மட்டுமே ரயில்வே கையாள்கிறது. 50 சதவீதம்கூட கையாளப்படவில்லை. இதில் மிகப் பெரிய இடைவெளி இருக்கிறது. ரயில்வே அதிகளவில் காலிப் பணியிடங்கள் உள்ளன. இதை மத்திய ரயில்வே அமைச்சரும் குறிப்பிட்டார்.
ரூ.2.16 லட்சத்துக்கும் அதிகமான காலிப் பணியிடங்கள் ரயில்துறையில் உள்ளன. இந்திய இளைஞர்களுக்கு இந்தப் பணிகளை அரசால் வழங்க முடியும். எனவே, இந்தத் துறையில் காலிப் பணியிடங்களை நிச்சயமாக நிரப்ப வேண்டும். தென் இந்தியர்கள் ரயில்வேயில் வேலைவாய்ப்புகள் திட்டமிட்டு மறுக்கப்படுகின்றன. ரயில் பயணிகள் பேசும் மொழியைப் பணியாளர்கள் பேச வேண்டும். உள்ளூர் மொழி தெரியாத பணியாளர்களால், உயிருக்கே பாதுகாப்பற்ற சூழல் ஏற்படுகின்றன. இதில் பயணிகளின் வாழ்க்கையோடு விளையாடக் கூடாது.
மாற்றுத் திறனாளிகள் நலன் கருதுங்கள்: ரயில்களில் மாற்றுத் திறனாளிகளை கையாள்வது ஒரு முக்கியமான விஷயம். இது தொடர்பான கோரிக்கைகளை பரிசீலிக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் சுலபமாக ரயில் நிலையங்களை அணுகும் வகையில் வசதிகளை செய்ய வேண்டும் என்பதை மதிப்பீடு செய்து நாடாளுமன்ற நிலைக் குழு பரிந்துரை செய்தது. அவர்களுக்கு வசதிகளை அளிப்பதில் சிக்கல்கள் இருக்கின்றன. கரோனாவுக்கு முன்பு மாற்றுத் திறனாளிக்கென சிறப்புப் பெட்டி இருந்தது. ஆனால், கரோனாவுக்குப் பிறகு அந்தப் பெட்டி நீக்கப்பட்டது. மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்புப் பெட்டியை மீண்டும் ஏற்படுத்தி அதை அவர்கள் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். அவர்களுக்கு என சிறப்புப் பெட்டிகள் இருந்தாலும், அதில் மற்றவர்கள் சட்டத்துக்குப் புறம்பாகப் பயணிக்கிறார்கள்.
துரதிர்ஷ்டவசமாக மாற்றுத் திறனாளிகள் அந்த ரயில் பெட்டியைப் பயன்படுத்திக்கொள்ள முடிவதில்லை. இப்பிரச்சினையை கவனத்தில் கொள்ள வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கான 4 சதவீத வேலை இட ஒதுக்கீட்டில் ஐபிஎஸ், ரயில்வே பாதுகாப்புப் படை போன்ற பல இடங்களுக்கு இட ஒதுக்கீடு கிடையாது என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது மிகவும் கண்டிக்கத்தக்கது. 2023-ஆம் ஆண்டுக்குள் 100 சதவீதம் ரயில்வே பாதைகள் மின்மயமாக்கப்படும் என்று சொல்லப்பட்டது, ஆனால், 73 சதவீத இலக்கைதான் அடைந்திருக்கிறீர்கள். எனவே, 100 சதவீத மின்மயமாக்கலை அடைய என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள்?
1368 ரயில்வே சுரங்கப் பாலங்களில் தண்ணீர் தேங்கும் அளவில் நாட்டில் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் தண்ணீர் தேங்கும்போது பம்பிங் செய்து வெளியேற்றுகிறோம். இதற்கு நிரந்தர தீர்வு வேண்டும். என்னுடைய தொகுதியான தூத்துக்குடியை ஓர் உதாரணமாக சொல்கிறேன். தூத்துக்குடியில் தண்ணீர் தேங்கும்போது கடல் நீரும் சேர்ந்து வந்துவிடுகிறது. தண்ணீரை பம்பிங் செய்வது எளிதான வேலை இல்லை. எனவே, சுரங்கப் பாதைகளில் வெள்ளக் காலத்தில் தண்ணீர் தேங்குவதைத் தடுக்க நிரந்தர தீர்வு வேண்டும். கடந்த 3 ஆண்டுகளில் ரயிலில் அடிப்பட்டு 60 யானைகள் இறந்திருக்கின்றன. இந்த உயிரிழப்புகள் தவிர்க்கப்பட வேண்டும். ரயில்வே துறையும் வனத் துறையும் இணைந்து தகவல் பரிமாற்றங்களைச் செய்து யானை உயிரிழப்பை தடுக்க வேண்டும். சிஏஜி அறிக்கையில்கூட, யானைகள் தண்டவாளத்தை கடக்கும் பகுதியில் அதற்கான அறிவிப்புகளை வைப்பதில்லை.
ஓட்டுநர்களுக்கு பயிற்சி தேவை! ரயில் ஓட்டுநர் ரயிலை மெதுவாக இயக்கவும் அதற்கான பயிற்சியும் வழங்கப்படவில்லை என்று கூறியிருக்கிறது. இதே அளவில் சென்றால், அடுத்த 10 ஆண்டுகளில் நாட்டில் யானைகளே இருக்காது. இந்தியாவில் 13000-க்கும் அதிகமான ரயில் விபத்துகளில் 12,000 ரயில்வே பயணிகள் கடந்த ஆண்டு உயிரிழந்திருக்கிறார்கள். தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கை 2021-ன் சமீபத்திய அறிக்கைப்படி ஒவ்வொரு நாளும் 32 பேர் உயிரிழக்கிறார்கள். இது மிகவும் அவமானகரமானது. அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எவ்வளவு பாதிக்கப்படுவார்கள்? இதற்கு ஏதாவது செய்தாக வேண்டும். இதேபோல ரயில்வே கிராஸிங்குகளிலும் விபத்துகள் நடக்கின்றன. இதுபோன்று விபத்துகள் நடக்காமல் இருக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கரோனா காலத்தில் பல ரயில்கள் நிறுத்தப்பட்டன, வாபஸ் பெறப்பட்டன. ரயில் நிறுத்த அறிவிப்புகளும் திரும்பப் பெறப்பட்டன.
எனது தொகுதியில் தூத்துக்குடி - கோயமுத்தூர் இணைப்பு ரயில், தூத்துக்குடி-வாஞ்சி மணியாச்சி, தூத்துக்குடி - சென்னை இணைப்பு எக்ஸ்பிரஸ் போன்றவை திரும்ப சேவையைத் தொடரவில்லை. இது உதாரணம்தான். நாடு முழுவதுமே இப்படி பல ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளன. ரயிலை நம்பி இன்னும் ஏராளமானோர் இருக்கிறார்கள். எனவே, நிறுத்தப்பட்ட ரயிகள் மீண்டும் இயக்கப்பட வேண்டும். கடைசியாக ஒன்றை குறிப்பிட விரும்புகிறேன். வட இந்தியா, தென் இந்திய பகுதிகளில் இயக்கப்படும் ரயில் பெட்டிகளில்கூட வித்தியாசம் இருப்பதாக கருதுகிறேன். தென் இந்தியாவில் ரயில் பெட்டிகளில் தண்ணீர் ஒழுகுவது என மிக மோசமாக இருக்கின்றன. இதனால், பயணிகள் பாதிக்கப்படுகிறார்கள். ரயில் பெட்டிகள் பாதுகாப்பு அற்றதாகவும் இருக்கின்றன.
நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம்: பட்ஜெட்டில் 2022-23-ஆம் ஆண்டில் தெற்கு ரயில்வேக்கு வெறும் ரூ.59 கோடி மட்டுமே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வட இந்திய ரயில்வேக்களுக்கு ரூ 13,200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் பட்ஜெட்டில் 101 முறைக்கு மேல் புதிய ரயில் பாதைகளுக்காக நிதி ஒதுக்கீடுகள் தெற்கு ரயில்வேயைவிட வடக்கு ரயில்வேக்களுக்கு அதிக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. கடந்த 4 ஆண்டுகளில் தெற்கு ரயில்வேயில் ரூ.308 கோடி மட்டுமே புதிய ரயில் பாதை திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால், வட இந்திய ரயில்வே திட்டங்களுக்கு ரூ. 31,008 கோடி ஒதுக்கப்பட்டுள்ளன ராமேஸ்வரம்-தனுஷ்கோடி இடையே 17 கி.மீ. புதிய ரயில்வே பாதை திட்டத்துக்கு 59 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. மதுரை-போடிநாயக்கனூர் இரட்டைப்பாதை திட்டத்துக்கு ரூ.125 கோடி, திருச்சிராப்பள்ளி-காரைக்கால்-வேளாங்கண்ணி முதல் திருத்துறைப்பூண்டி வரையிலான அகலப்பாதையாக மாற்றும் திட்டத்துக்கு ரூ. 121 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன. இவை எல்லாம் சில உதாரணங்கள்தான்.
இங்குள்ள எங்கள் பிரதிநிதிகளின் சார்பில் ரயில்வே அமைச்சருக்கு கோரிக்கை விடுக்கிறேன். வடக்கு ரயில்வேக்கு வழங்கப்படுவதற்கும், தெற்கு ரயில்வேக்கு வழங்கப்படுவதற்கும் இடையே உள்ள வேறுபாடுகளைப் பார்க்கும்போது எதுவும் செய்யப்படவில்லை என்று தெரிகிறது. நீங்கள் அனைவருக்குமான இந்தியா, ஒரே நாடு என்று பேசுகிறீர்கள். ரயில்வேயும் ஒரே நாடு போலத்தான் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். நிதி ஒதுக்கீடுகள் அதிகரிக்கப்பட வேண்டும். நிறுத்தப்பட்ட ரயில்கள், நிறுத்தங்கள் மீண்டும் பயன்பாட்டுக்கு வர வேண்டும். மக்கள் அவதியுறுகிறார்கள். ரயில் பெட்டிகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். தெற்கு ரயில்வேயில் அவை மேம்படுத்தப்பட வேண்டும்'' இவ்வாறு கனிமொழி பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT