Published : 16 Mar 2022 07:41 AM
Last Updated : 16 Mar 2022 07:41 AM

5 மாநில தலைவர்கள் ராஜினாமா செய்ய சோனியா உத்தரவு: காங். நிர்வாகிகளின் கோரிக்கை அடிப்படையில் நடவடிக்கை

புதுடெல்லி: 5 மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் படுதோல்வி அடைந்ததைத் தொடர்ந்து மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்யுமாறு காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி உத்தரவிட்டுள்ளார்.

உத்தரபிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், கோவா, உத்தராகண்ட் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 10-ம் தேதி அறிவிக்கப்பட்டன.

இதில் உ.பி., உத்தராகண்ட், மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களில் பாஜக ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டது. பஞ்சாபில் ஆம் ஆத்மி முதல்முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளது.

இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி மிக மோசமான தோல்வியைச் சந்தித்தது. உத்தராகண்ட், மணிப்பூர், கோவா மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியால் வெல்ல முடியவில்லை. மேலும் பஞ்சாபில் ஆட்சியையும் பறிகொடுத்துள்ளது. பஞ்சாபில் நேர்ந்த உட்கட்சிப் பூசல் காரணமாக அங்கு ஆட்சியை ஆத் ஆத்மி கட்சியிடம் காங்கிரஸ் பறிகொடுத்துள்ளது.

பஞ்சாபில் ஆட்சியை இழந்தது

கடந்த 2017 தேர்தலில் 20 தொகுதிகளில் மட்டுமே வென்றிருந்த ஆம்ஆத்மி கட்சி, இந்தத் தேர்தலில் 92 தொகுதிகளில் வென்று ஆட்சியைப் பிடித்தது. காங்கிரஸ் கட்சியால் வெறும் 18 இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்தது. குறிப்பாக காங்கிரஸ் முதல்வராக இருந்த சரண்ஜித் சிங் சன்னி போட்டியிட்ட இரு தொகுதிகளிலும் தோல்வி அடைந்தார்.

இந்நிலையில் தேர்தல் தோல்விகுறித்து விவாதிக்க கடந்த 13-ம் தேதி காங்கிரஸ் செயற்குழு கூடியது. அதில் காங்கிரஸின் தலைவராக சோனியா காந்தி நீடிப்பார் என்று முடிவு செய்யப்பட்டது. மேலும் தேர்தல் தோல்வி குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

சித்து மீது நடவடிக்கை

இந்நிலையில் 5 மாநில காங்கிரஸ் தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கட்சி மேலிடத்துக்கு கோரிக்கைகள் வைக்கப்பட்டன. முக்கியமாக பஞ்சாப்பில் ஆட்சியை பறிகொடுத்த பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் வைக்கப்பட்டு வந்தன.

இதனிடையே, தேர்தலில் தோல்வியைச் சந்தித்த 5 மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர்களும் தங்களது பதவியை ராஜினாமா செய்யுமாறு கட்சியின் தலைவர் சோனியா காந்தி நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கட்சியில் மறு சீரமைப்பு செய்வதற்காக 5 மாநில காங்கிரஸ் தலைவர்களை ராஜினாமா செய்யுமாறுசோனியா காந்தி அறிவுறுத்தியுள்ள தாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார்.

உத்தர பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் அஜய் குமார் லல்லு, கோவா காங்கிரஸ் தலைவர் கிரீஷ் ராயா, உத்தராகண்ட் காங்கிரஸ் தலைவர் கணேஷ் கொடியால், மணிப்பூர் காங்கிரஸ் தலைவர் லோக்கேன் சிங், பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங்சித்து ஆகியோரை ராஜினாமா செய்ய சோனியா காந்தி உத்தரவிட்டுள்ளார். உடனடியாக, இவர்கள் பதவி விலக வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x