Published : 15 Mar 2022 03:29 PM
Last Updated : 15 Mar 2022 03:29 PM

'கபில் சிபில் ஆர்எஸ்எஸ் மொழியில் பேசுகிறார்' - மாணிக்கம் தாகூர் குற்றச்சாட்டால் வலுக்கும் உட்கட்சிப் பூசல்

காங்கிரஸ் கட்சியின் மக்களவைத் தலைவர் மாணிக்கம் தாகூர்

புதுடெல்லி: "காங்கிரஸ் கட்சியை அழிப்பதற்காக,காந்தி குடும்பத்தினரை கட்சியின் தலைமைப் பதவியில் இருந்து அகற்ற ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக நினைக்கிறது" என்று அக்கட்சியின் மக்களவைத் தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்திருக்கிறார்.

நடந்து முடிந்த ஐந்து மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியைச் சந்தித்தது. உத்தரப் பிரதேசத்தில் அக்கட்சி இரண்டு இடங்களை மட்டும் பெற்றிருந்தது. இதுகுறித்து ராகுல்காந்தி, "மக்களின் முடிவை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். தோல்வியிலிருந்து பாடம் கற்றுக்கொள்வோம்" எனத் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தோல்விக்கான காரணங்கள் குறித்து ஆலோசனை நடத்த கடந்த ஞாயிற்றுக்கிழமை காங்கிரஸ் காரிய கமிட்டிக் கூட்டம் நடைபெற்றது. இதில் மீண்டும் சோனியா காந்தியே கட்சிக்கு தலைமையேற்று நடத்த வேண்டும். அரசியல் தேவைக்கேற்ப கட்சியை வலுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இந்தக் கூட்டத்தின் முடிவுக்கு பின்னர் காங்கிரஸ் கட்சியில் மீண்டும் உட்கட்சிப்பூசல் தொடங்கியுள்ளது.

செய்தித்தாள் ஒன்றுக்கு பேட்டியளித்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கபில் சிபில், "காங்கிரஸ் கட்சியின் தலைமையில் இருந்து காந்தி குடும்பத்தினர் ஒதுங்கிக் கொண்டு,மற்ற தலைவர்களுக்கு கட்சியைத் தலைமை தாங்கி வழிநடத்த வாய்ப்பளிக்க வேண்டும். கட்சித்தலைமை என்ன குடும்பச் சொத்தா, நான் காங்கிரஸ் எல்லோருக்குமானதாக இருக்க வேண்டும் என விரும்புகிறேன். சிலர் அது ஒரு குடும்பத்திற்கானது என்று நினைக்கின்றனர்" எனத் தெரிவித்துள்ளார்.

கபில் சிபிலின் இந்த கருத்துக்கு காங்கிரஸ் கட்சியின் மக்களவைத் தலைவர் மாணிக்கம் தாகூர் ட்விட்டரில் பதிலளித்து பதிவிட்டுள்ளார். அதில், " நேரு குடும்பத்தினரை காங்கிரஸ் தலைமையில் இருந்து வெளியேற்ற ஆர்எஸ்எஸ், பாஜக ஏன் விரும்புகிறது என்றால், அவர்களின் தலைமை இல்லாமல், காங்கிரஸ் ஜனதா கட்சி போல ஆகிவிடும். அதன் பிறகு காங்கிரஸையும் இந்தியாவின் அடையாளத்தையும் அழிப்பது அவர்களுக்கு எளிது. இது கபில் சிபிலுக்கும் தெரியும். ஆனால், காந்தி குடும்பத்தை விமர்சிக்கும் போது அவர் ஏன் ஆர்எஸ்எஸ், பாஜக மொழியை பயன்படுத்துகிறார்" என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் பக்கத்தில், மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி அக்கட்சியின் முன்னாள் தலைவர்களின் வீடியோவை வெளியிட்டு, நாங்கள் தொடர்ந்து போராடுவோம், சமாளித்து வருவோம், உங்களுக்கான குரலை தொடர்ந்து எழுப்புவோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x