Published : 15 Mar 2022 03:16 PM
Last Updated : 15 Mar 2022 03:16 PM
பெங்களூரு: மாநிலத்தின் கல்வி, சட்டம் ஒழுங்கு மற்றும் மத நல்லிணக்கத்தை நிலை நாட்டும் பொறுப்பு கர்நாடக அரசிடம்தான் உள்ளது என்று அம்மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே சிவகுமார் வலியுறுத்தியுள்ளார்.
கர்நாடகாவில் கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டதற்கு எதிராக உடுப்பி முஸ்லிம் மாணவிகள் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இவ்வழக்கை தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஷ்தி, நீதிபதிகள் ஜே.எம்.காஷி, கிருஷ்ணா தீட்ஷித் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது. இந்த நிலையில், இது தொடர்பான தீர்ப்பு இன்று நீதிபதிகள் வழங்கினர் அதில் "ஹிஜாப் அணிவது இஸ்லாமிய நம்பிக்கையின்படி அத்தியாவசிய பழக்கம் இல்லை. ஆகையால் கல்வி நிலையங்களில் ஹிஜாப், காவித் துண்டு என மத அடையாளங்களைத் தாங்கி வர தடை விதித்து பிப்ரவரி 5, 2022-ல் விதிக்கப்பட்ட தடை செல்லும். பள்ளிச் சீருடை என்பது சட்டபூர்வமானதே" என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
கர்நாடக உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக அரசியல் தலைவர்கள் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், சட்டம் ஒழுங்கு மற்றும் மத நல்லிணக்கத்தை நிலை நாட்டும் பொறுப்பு கர்நாடக அரசிடம் உள்ளது என்று கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே சிவகுமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டி.கே. சிவகுமார் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஹிஜாப் சர்ச்சையில் எனது மிகப்பெரிய கவலை கல்வி மற்றும் சட்டம் ஒழுங்குதான். ஹிஜாப் தொடர்பாகத்தான் கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆனால் மாநிலத்தின் கல்வி, சட்டம் ஒழுங்கு மற்றும் மத நல்லிணக்கத்தை நிலை நாட்டும் பொறுப்பு கர்நாடக அரசிடம்தான் உள்ளது.
1. பள்ளி மற்றும் கல்லூரிகளில் சட்டம் ஒழுங்கு பராமரிக்கப்பட வேண்டும் .
2. மதம் மற்றும் பாலினத்தைப் பொருட்படுத்தாது மாணவர்களின் கல்விக்கு தடை ஏற்பட கூடாது.
இவற்றை கர்நாடக அரசு முதிர்ச்சியான தலைமையை வெளிப்படுத்தி உறுதியளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT