Published : 14 Mar 2022 07:29 AM
Last Updated : 14 Mar 2022 07:29 AM
புதுடெல்லி: உத்தர பிரதேச தேர்தலில் 255 இடங்களைக் கைப்பற்றிய பாஜக, மீண்டும் ஆட்சி அமைக்கிறது. முக்கிய எதிர்க்கட்சி சமாஜ்வாதி 111 தொகுதிகளை பெற்றுள்ளது. பாஜக கூட்டணியில் அப்னா தளம் (சோனுலால்) 12, நிஷாத் கட்சி 6 தொகுதிகளில் வெற்றி பெற்றன. சமாஜ்வாதி கூட்டணியில் ராஷ்டிரிய லோக் தளம் (ஆஎல்டி) 8, எஸ்பிஎஸ்பி 6 இடங்ளை வென்றன.
காங்கிரஸ் மற்றும் குற்றப் பின்னணி அரசியல்வாதி ராஜா பைய்யா எனும் ரகுராஜ் பிரதாப் சிங்கின் புதிய கட்சி ஜன் சத்தா தளம், லோக் தந்திரிக் ஆகியவை தலா 2 தொகுதிகள் பெற்றன. மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி ஒரு தொகுதியை வென்றது.
இந்நிலையில், தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்ட விவரங்களின்படி, சமாஜ்வாதியில் 25 வேட்பாளர்கள், அதன் கூட்டணி கட்சியின் 3 வேட்பாளர்கள் 5,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது தெரிய வந்துள்ளது. மேலும், தம்பூர் தொகுதியில் பாஜக வேட்பாளர் அசோக் குமார் ராணா வெறும் 203 வாக்குகளில் சமாஜ்வாதியின் நயீம் உல் ஹசனை தோற் கடித்துள்ளார். பாரங்கி மாவட்ட குர்ஸி தொகுதியில் பாஜக.வின்சாகேந்திர வர்மா, சமாஜ் வாதியின் ராகேஷ் வர்மாவை 217 வாக்குகளில் வென்றுள்ளார். சமாஜ்வாதியின் கூட்டணி ஆர்எல்டி, பிஜ்னோரில் 1,445, பரவுத்தில் 325மற்றும் நஹதவுரில் 258 வாக்குகளில் பாஜக வேட்பாளர்களிடம் தோல்வி அடைந்துள்ளனர்.
பாஜகவின் 18 வேட்பாளர்களும் கூட 5,000 வாக்குகளுக்கும் குறைவான வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளனர். இதில் ஆயிரத்துக்கும் குறைவான வித்தியாசத்தில் பாஜகவின் 6 வேட்பாளர்கள் தோல்வி அடைந்துள்ளனர். பாஜகவில், கமலேஷ் செய்னி சாந்த்பூரில் 234, ஓம்பிரகாஷ் பாண்டே இசவுலியில் 261 வாக்குகளில் சமாஜ்வாதியிடம் தோல்வி அடைந்துள்ளனர். பாஜககூட்டணி கட்சி அப்னா தளம் (சோனுலால்) மற்றும் நிஷாத் கட்சிகள் தலா ஒன்றில் 4 ஆயிரத்துக்கும் குறைவான வாக்குகளில் தோல்வி அடைந்துள்ளன.
ஒரு லட்சம் வாக்கு
பாஜக.வில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் மகன் பங்கஜ் சிங்குக்கு, நொய்டாவில் 1.81 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் கிடைத்துள்ளன. காஜியாபாத்தில் சுனில் குமார் சர்மா 2.14 லட்சம், மீரட் ராணுவக் குடியிருப்பில் அமித் அகர்வால் 1.18 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்றுள்ளனர். மதுராவில் பாஜக மின் துறை அமைச்சர் காந்த் சர்மா 1.12 லட்சம் மற்றும் ஆக்ராவின் வடக்கில் புருஷோத்தம் கண்டல்வால் 1.09 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT