Published : 24 Apr 2016 11:23 AM
Last Updated : 24 Apr 2016 11:23 AM

மணமகனின் தாய் மாமன் மகள் புகார் எதிரொலி: திருமலையில் சினிமா பாணியில் அவசர அவசரமாக திருமணம் - தடுக்க வந்த போலீஸாரை தாக்க உறவினர்கள் முயற்சி

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம், மிட்ட ஒட்டபல்லி கிராமத்தைச் சேர்ந்த ஜனார்தன் என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஹேமலதா என்பவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இவர்களுக்கு திருமலையில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நேற்று முன்தினம் திருமணம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. திருமணம் நடைபெறுவதற்கு சிறிது நேரத்துக்கு முன்பாக, திடீரென நெல்லூரில் இருந்து வந்த போலீஸார் மணமகனை கைது செய்வதாகக் கூறி போலீஸ் வாகனத்தில் ஏற்றினர். இதை யடுத்து மணமகனின் உறவினர்கள் போலீஸ் வாகனத்தை முற்றுகை யிட்டு, போலீஸாருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீஸாரை தாக்கவும் முயற்சி செய்தனர்.

இதற்கிடையே, போலீஸ் வாகனத்தில் இருந்த மணமகன் அங்கிருந்து தப்பி திருமண மண்டபத்துக்குள் ஓடினார். அங்கிருந்த மணமகள் ஹேமலதா வின் கழுத்தில் அவசர அவசரமாக தாலி கட்டினார். இந்தப் பிரச்சினை யால், திருமலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் திருமலை போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று இரு தரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

மாமன் மகள் புகார்

காவல் துறை எஸ்ஐ ஜிலானி கூறும்போது, “தன்னை காதலித்து வந்த மணமகன் ஜனார்தன் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டதாக அவருடைய தாய் மாமன் மகள் புகார் செய்தார். அதனால்தான் நாங்கள் அவரை கைது செய்ய வந்தோம். திருமணத்தை நிறுத்தி விசாரிக்கவே நாங்கள் வந்தோம். ஆனால் அவர் எங்களது பிடியிலிருந்து தப்பி ஓடி மணமகள் ஹேமலதாவின் கழுத்தில் தாலி கட்டி விட்டார். இனி நடவடிக்கை எடுப்போம்” என்றார்.

நான் தவறு செய்யவில்லை

மணமகன் ஜனார்தன் கூறும் போது, “எங்கள் குடும்பத்தினர் மீது உள்ள காழ்ப்புணர்ச்சியால் எனது உறவினர்கள் பொய் புகார் செய்துள்ளனர். நான் யாரையும் ஏமாற்றவில்லை. இந்தப் புகார் குறித்து போலீஸார் முறைப்படி விசாரிக்காமல் என்னை கைது செய்ய வந்தனர். இது எந்த வகையில் நியாயம்? இதை நான் சட்டப்படி எதிர் கொள்வேன்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x