Published : 13 Mar 2022 04:12 PM
Last Updated : 13 Mar 2022 04:12 PM
புதுடெல்லி: காங்கிரஸ தலைவர் பதவிக்கு முகுல் வாஸ்னிக்கை ஜி 23 தலைவர்கள் பரிந்துரைத்ததாகவும், அது ஏற்கப்படவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காங்கிரஸ் தொடர் தோல்வியை சந்திப்பது ஏன் என்பது பற்றி சுயபரிசோதனை செய்ய வேண்டும் என்று கட்சிக்குள் எதிர்ப்பு குரல்கள் அதிகரிக்க தொடங்கி உள்ளன. கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில்காங்கிரஸ் தோற்ற போதே குலாம் நபி ஆஸாத் தலைமையில் 23 காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கட்சியின் மூத்த தலைவர் சோனியாவுக்கு கடிதம் எழுதினர்.
காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று அவர்கள் அந்த கடிதத்தில் வலியுறுத்தி இருந்தனர்.
வரும் செப்டம்பர் மாதம் காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர் தேர்தல் நடக்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் அண்மையில் நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸ் படுதோல்வியடைந்துள்ளது.
காங்கிரஸில் சோனியா, ராகுலுக்கு எதிரான எதிர்ப்பு குரல் அதிகரித்து உள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் காரிய கமிட்டிக் இன்று கூடி ஆலோசனை நடத்தவுள்ளது.
முன்னதாக காங்கிரஸ், அதிருப்தி தலைவர்களான கபில் சிபல், ஆனந்த் சர்மா, மனீஷ் திவாரி உள்ளிட்டோர், டெல்லியில் உள்ள மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத்தின் வீட்டில் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினர்.
அந்தக் கூட்டத்தில் கட்சியின் தலைவர் பதவிக்கு முகுல் வாஸ்னிக்கை ஜி 23 தலைவர்கள் பரிந்துரைத்ததாகவும், அது ஏற்கப்படவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து காங்கிரஸின் ஜி 23 குழுவைச் சேர்ந்த மூத்த தலைவர் ஒருவர் கூறியதாவது:
சோனியா காந்தி இடைக்கால தலைவராக இருந்தாலும், அது கே.சி. வேணுகோபால், அஜய் மக்கன் மற்றும் ரண்தீப் சுர்ஜேவாலா ஆகியோரால் கட்சி நடத்தப்படுகிறது. அவர்கள் மீது எந்த கட்டுப்பாடும் இல்லை.
ராகுல் காந்தி தலைவர் அல்ல. ஆனால் அவர் திரைக்குப் பின்னால் இருந்து செயல்படுகிறார் மற்றும் முடிவுகளை எடுக்கிறார். அவர் வெளிப்படையாகப் பேசுவதில்லை. நாங்கள் கட்சியின் நலன் விரும்பிகள், எதிரிகள் அல்ல. இதுவே காங்கிஸில் இருக்கும் பிரச்சினை. நாங்கள் ஒரு மாற்று தலைவரை முன்னிறுத்தினோம்.
ஆனந்த் சர்மா, குலாம் நபி ஆசாத், கபில் சிபல் அடங்கிய ஜி23, கட்சியின் தலைவர் பதவிக்கு முகுல் வாஸ்னிக் பெயரை பரிந்துரைத்துள்ளது. ஆனால் அது ஏற்கப்படவில்லை.
2000 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சோனியா காந்தி செய்ததைப் போல புதிய கட்சித் தலைவர் கட்சியை வழிநடத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT