Published : 13 Mar 2022 11:10 AM
Last Updated : 13 Mar 2022 11:10 AM

முக்கிய தலைவர்களுடன் சோனியா காந்தி ஆலோசனை: காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்துக்கு முன்பு விவாதம்

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி: கோப்புப் படம்

புதுடெல்லி: காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டத்துக்கு முன்பாக இன்று காலை கட்சியின் மூத்த நிர்வாகிகள் சிலருடன் சோனியா காந்தி ஆலோசனை நடத்தி வருகிறார்.

உத்தரப்பிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட், மணிப்பூர் ஆகிய ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் 4 மாநிலங்களில் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது. ஆட்சியில் இருந்த பஞ்சாபில் காங்கிரஸ் பெரும் தோல்வியை தழுவியது.

மொத்தம் மூன்று மாநிலங்களில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் எண்ணிக்கை தற்போது இரண்டு மாநிலமாக குறைந்துள்ளது. ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் மட்டுமே காங்கிரஸ் ஆட்சியில் உள்ளது.

கடந்த 5 மாநில சட்டசபை தேர்தலில் ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் தீவிர பிரசாரம் செய்தனர். குறிப்பாக ராகுலை விட பிரியங்காவின் பிரசாரம் மிக அதிகமாக இருந்தது. உத்தரபிரதேசத்தில் மட்டும் பிரியங்கா 160 பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பேசினார்.

பெண்களை கவரும் வகையில் பல்வேறு அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டார். பிரியங்கா இவ்வளவு கடினமாக உழைத்தும் காங்கிரஸுக்கு தோல்வி ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் காங்கிரஸ் தோல்வி குறித்து ஆலோசனை செய்ய காங்கிரஸ் காரிய கமிட்டி நாளை கூடுகிறது. டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நாளை மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. 5 மாநில தேர்தல் தோல்வி மற்றும் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.

காங்கிரஸ் தொடர் தோல்வியை சந்திப்பது ஏன் என்பது பற்றி சுயபரிசோதனை செய்ய வேண்டும் என்று கட்சிக்குள்ளும் கோரிக்கைகள் எழுந்துள்ளது. இந்த சூழலில் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நடைபெறுகிறது.

காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டத்துக்கு முன்பாக இன்று காலை கட்சியின் மூத்த நிர்வாகிகள் சிலருடன் சோனியா காந்தி ஆலோசனை நடத்துகிறார். இதற்காக மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் சோனியா காந்தி வீட்டில் கூடினர். காரியக் கமிட்டிக் கூட்டத்தில் எடுக்கப்பட வேண்டிய முடிவுகள், ஜி 23 தலைவர்களின் நெருக்கடியை சமாளிப்பது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படுவதாக தெரிகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x