Published : 12 Mar 2022 09:43 PM
Last Updated : 12 Mar 2022 09:43 PM
புதுடெல்லி: உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சிக்கு (பிஎஸ்பி) 1.18 கோடி வாக்குகளுடன் ஒரே ஒரு தொகுதி மட்டுமே கிடைத்துள்ளது. இதன் மூலம், அக்கட்சியின் தலைவர் மாயாவதிக்கு பட்டியலின வாக்குகள் நழுவுகிறதா எனும் கேள்வி எழுந்துள்ளது.
உபி மக்கள்தொகையின் மொத்த வாக்காளர்கள் 15.2 கோடி. இதில், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த வாக்காளர்கள் சுமார் மூன்று கோடி பேர். இவர்களுக்காக கடந்த ஏப்ரல் 14, 1984-ல் கன்ஷிராம், பகுஜன் சமாஜ் கட்சியைத் தொடங்கினார். இக்கட்சியுடன் இதர பிற்படுத்தப்பட்டவர்கள் மற்றும் சிறுபான்மையினரையும் சேர்த்தார். இந்த சமூகத்தினர் அனைவரையும் பகுஜன் சமாஜ் எனும் பெயரில் அழைத்தார் கன்ஷிராம். அவர் கட்சியை தொடங்கிய போது பகுஜன் சமாஜினர் இந்தியாவில் சுமார் 6,000 பிரிவுகளாக 85 சதவிகிதம் பேர் இருந்தனர்.
இவர்களின் காப்பாளராக தன்னை முன்னிறுத்திய கன்ஷிராம், தாம் கவுதம புத்தர், மகாத்மா ஜோதிபா புலே, நாரயண் குரு, சத்ரபதி சாஹுஜி மஹராஜ் மற்றும் தந்தை பெரியார் ஆகியோரது கொள்கைகளால் ஈர்க்கப்பட்டதாகவும் அறிவித்திருந்தார். இதனால், இந்த ஐந்து மகான்களின் உருவப்படங்கள் பிஎஸ்பியின் மேடைகளில் தவறாமல் இடம்பெற்று வந்தன. அம்பேத்கர் கூட்டமைப்பிடம் இருந்த யானையே, பிஎஸ்பிக்கும் தேர்தல் சின்னமானது. ஆனால், கன்ஷிராமின் வாரிசாக கட்சியில் மாயாவதி 2001 ல் வளர்ந்த பின்பு கட்சியில் பல மாற்றங்கள் உருவாகின.
குறிப்பாக, 2007 தேர்தலில் உபியில் ஆட்சியை பிடிக்க வேண்டி பிஎஸ்பியில் பிராமணர் உள்ளிட்ட உயர் குடிகளுக்கும் இடம் அளித்தார் மாயாவதி. இந்த மாற்றங்களால் அவருக்கு 2007 தேர்தலில் தனிமெஜாரிட்டியில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதன் தாக்கமாக உபிக்கும் வெளியே தனது கால்களை பதிக்கத் தொடங்கியது பிஎஸ்பி. இதில், ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் ஆகிய மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் ஓரிரு தொகுதிகள் கிடைத்தன.
இருப்பினும், 2007 -ம் ஆண்டிற்கும் முன்பாக, மாயாவதி உபியின் கூட்டணி ஆட்சிகளின் முதல்வராக மூன்றுமுறை பதவி வகித்தார். 2019 மக்களவை தேர்தலில் உபியில் 19.3 சதவிகித வாக்குகளுடன் இரண்டாவது பெரிய கட்சியானது பிஎஸ்பி. தற்போது 2022 உபி சட்டப்பேரவையில் 12.88 சதவிகித வாக்குகளுடன் மூன்றாவது பெரிய கட்சியாகி உள்ளது. ஆனால், இதற்கானப் பலன் எதுவும் பிஎஸ்பிக்கு இந்த முறை கிடைக்கவில்லை.
ஏனெனில், மார்ச் 10 ல் வெளியான உபி தேர்தல் முடிவுகளில், பிஎஸ்பிக்கு ஒரே ஒரு தொகுதி மட்டுமே கிடைத்துள்ளது. எனினும், இவரது கட்சிக்கு உபி முழுவதிலும் போட்டியிட்ட 403 தொகுதிகளின் வாக்குகள் எண்ணிக்கை 1,18,73,137 (ஒரு கோடியே பதினெட்டு லட்சத்து எழுபத்தி மூன்றாயிரத்து நூற்று முப்பத்து ஏழு) ஆகும். இதில், மாயாவதியின் உறுதியான சமூக வாக்குகளாகக் கருதப்பட்ட ஜாட்டவ் பிரிவினரும் விலகத் தொடங்கி விட்டது தெரிந்துள்ளது. 2017 தேர்தலில் 22.23 சதவிகித வாக்குகளுடன் 19 தொகுதிகள் பெற்றிருந்தார். அதைவிட 10 சதவிகித வாக்குகள் மட்டுமே குறைந்தாலும், தொகுதிகள் அதற்கேற்றபடி கிடைக்கவில்லை.
இதனால், பிஎஸ்பியின் அடிப்படை வாக்காளர்களும் விலகுவதால் அதன் எதிர்காலம் என்னவாகும் என்ற கேள்வியும் எழுந்து விட்டது. உபியின் முன்னாள் முதல்வரான மாயாவதியின் கட்சியில் அவரைத் தவிர வேறு முக்கியத் தலைவர்கள் யாரும் இல்லை. உபியின் 2007 சட்டப்பேரவை தேர்தலின் போது பிராமணரான சதீஷ்சந்திர மிஸ்ராவை கட்சிக்குள் கொண்டு வந்தார். அவரது வரவு பல பட்டியல் இனத்தவர்களை பெரும் அதிருப்திக்கு உள்ளாக்கியது. இதன் தாக்கமும் முதல் முறையாக இந்த தேர்தலில் வெளிச்சமாகி விட்டது. இவரது கட்சியின் சரிவு, உபியில் பாஜகவிற்கு ஆட்சி அமைக்கும் அளவில் பலனளித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT