Published : 12 Mar 2022 11:31 AM
Last Updated : 12 Mar 2022 11:31 AM
லக்னோ: நடந்து முடிந்த உ.பி. தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி ஓரிடம் மட்டுமே பெற்றதற்கு ஊடகங்கள் தமது கட்சியை பாஜகவின் பி டீம் என்று பிரச்சாரம் செய்ததே காரணம். ஆகையால் பகுஜன் சமாஜ் இனி ஊடக விவாதங்களில் பங்கேற்காது என்று மாயாவதி அதிரடியாக அறிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் பாஜக அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை தக்கவைத்துக் கொண்டுள்ளது. அங்கு மொத்தமுள்ள 403 தொகுதிகளில் பாஜக 255 தொகுதிகளிலும், அதன் கூட்டணி கட்சிகளான அப்னா தளம் (சோனிலால்) 12, நின்ஷாத் கட்சி 7 இடங்களிலும் வெற்றி பெற்றன. பாஜக கூட்டணி 274 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. முதல்வர் யோகி ஆதித்யநாத் கோரக்பூர் தொகுதியில் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இரண்டாவது முறையாக அவர் முதல்வராக பதவியேற்க உள்ளார். சமாஜ்வாதி கட்சி 111 இடங்களிலும் அதன் கூட்டணி கட்சிகளான ராஷ்டிரிய லோக் தளம் 8, சுகல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி 6 இடங்களிலும் வெற்றி பெற்றன. காங்கிரஸுக்கு 2 இடங்களும் பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஓரிடமும் மட்டுமே கிடைத்தன.
ஒரு சீட்டுக்குக் காரணம் ஊடகம்.. இந்நிலையில், நடந்து முடிந்த உ.பி. தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி ஓரிடம் மட்டுமே பெற்றதற்கு ஊடகங்கள் தமது கட்சியை பாஜகவின் பி டீம் என்று பிரச்சாரம் செய்ததே காரணம். ஆகையால் பகுஜன் சமாஜ் இனி ஊடக விவாதங்களில் பங்கேற்காது என்று மாயாவதி அதிரடியாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ”உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் அம்பேத்கர் கொள்கை வழியில் நிற்கும் பகுஜன் சமாஜ் கட்சிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் ஊடகங்கள் செயல்பட்டன. சாதிய ரீதியான வெறுப்பினால் ஊடக முதலாளிகள் மேற்கொண்ட வேலை யாருக்கும் தெரியாது என்று நினைக்க வேண்டாம். இனிமேல் பகுஜன் சமாஜ் கட்சி தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்காது” என்று பதிவிட்டுள்ளார்.
உத்தரப் பிரதேச தேர்தல் வரலாற்றில் பகுஜன் சமாஜ் கட்சி ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி என்ற நிலைக்குத் தாழ்ந்துள்ளது இதுவே முதன்முறை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT