Published : 10 Mar 2022 09:09 PM
Last Updated : 10 Mar 2022 09:09 PM
புதுடெல்லி: "உத்தரப் பிரதேசம், கோவா, மணிப்பூர் ஆகிய மூன்று மாநிலங்களில் ஆட்சியில் இருந்தாலும் பாஜகவின் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது. கருத்துக் கணிப்புகள் தவறானவை என கோவா தேர்தல் முடிவுகள் நிரூபித்துள்ளன" என்று வெற்றி உரையில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசதம் உள்ளிட்ட 4 மாநிலங்களில் பாஜக பெற்றுள்ள அமோக வெற்றிக்கு பிறகு, பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் உள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் உரையாற்றி வருகிறார். அதில் அவர் பேசியது, "இந்த ஜனநாயகத் திருவிழாவில் பங்கேற்று, பாஜகவை வெற்றி பெறச் செய்த அனைத்து வாக்காளர்களுக்கும் நன்றி. மக்களின் நம்பிக்கையைப் பெறுவதில் நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம். ஹோலி பண்டிகை வாக்கு எண்ணிக்கை அன்று தொடங்கும் என்று நாங்கள் முன்பே கூறியிருந்தோம்.
எல்லையை ஒட்டிய மாநிலம், கடலோர மாநிலம், கங்கையின் சிறப்பு பெற்ற மாநிலம், வடகிழக்கு எல்லையில் உள்ள மாநிலம் என நான்கு திசைகளிலும் பாஜகவுக்கு ஆசிர்வாதம் கிடைத்துள்ளது. இந்த மாநிலங்களின் சவால்கள் வேறு, வளர்ச்சிப் பாதையும் வேறு. ஆனால் அனைவரையும் ஒரே எண்ணத்தில் கட்டிப்போடுவது பாஜக மீதான நம்பிக்கை, பாஜகவின் கொள்கை, பாஜகவின் எண்ணம். உத்தரப் பிரதேசம், கோவா, மணிப்பூர் ஆகிய மூன்று மாநிலங்களில் ஆட்சியில் இருந்தாலும் பாஜகவின் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது. கருத்துக் கணிப்புகள் தவறானவை என கோவா தேர்தல் முடிவுகள் நிரூபித்துள்ளன.
உத்தரப் பிரதேசம் இந்த நாட்டிற்கு நிறைய பிரதமர்களை கொடுத்துள்ளது. ஆனால், ஒரு முதல்வரை இரண்டாவது முறையாக மீண்டும் தேர்ந்தெடுத்திருப்பது இதுவே முதல் முறை. உ.பி.யில் 37 ஆண்டுகளுக்குப் பிறகு, ஆளுங்கட்சி தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்துள்ளது.
உத்தராகண்ட் மாநிலத்தில் பாஜக புதிய வரலாற்றை எழுதியுள்ளது. முதல் முறையாக ஒரு கட்சி தொடர்ந்து இரண்டாவது முறையாக மாநிலத்தில் ஆட்சிக்கு வந்துள்ளது. இந்த முடிவுகள் பாஜகவின் ஏழைகளுக்கு ஆதரவான ஆட்சியை வலுவாக நிரூபிக்கின்றன. இதற்கு முன்னால் இருந்த அரசாங்கத்தை, மக்கள் மின்சாரம், எரிவாயு, தண்ணீர் போன்ற அடிப்படை வசதிகளுக்கு எளிதாக அணுகமுடியவில்லை. ஆனால், எங்கள் அரசு அனைத்து ஏழைகளையும் சென்றடையும். ஏழைகளின் பெயரில் ஏராளமான திட்டங்கள், அறிவிப்புகள் வெளியிடப்பட்டன, ஆனால் ஏழைகள் உரிமைகளைப் பெறுவதை உறுதிசெய்வது அவர்களுக்கு நல்லாட்சி வழங்குவது மிகவும் முக்கியமானது. இதை பாஜக புரிந்துகொண்டுள்ளது.
இந்தத் தேர்தலில் பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ள பகுதிகளில் நாங்கள் அமோக வெற்றி பெற்றுள்ளோம். 2019-ம் ஆண்டு மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சி அமைத்ததற்கு 2017 உத்தரப் பிரதேச தேர்தல் வெற்றியே காரணம் என நிபுணர்கள் கூறினர். தற்போதைய தேர்தல் முடிவுகள் 2024 தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கும் என கூறுவார்கள் என்று நம்புகிறேன்.
உ.பி. தேர்தலில் சாதி பிரதானமாக இருக்கிறது என்று சிலர் அவதூறு செய்கிறார்கள். இப்படி சொல்லுபவர்கள் 2014, 2017, 2019, 2022-ம் ஆண்டு தேர்தல் முடிவுகளைப் பார்க்கவும். ஒவ்வொரு முறையும் உ.பி மக்கள் சாதியை ஓரம்கட்டி வளர்ச்சிக்கான அரசியலைத் தேர்ந்தெடுத்துள்ளனர். உத்தரப் பிரதேசத்தின் அன்பும், ஆசிகளும் என்னை உபி-வாலா ஆக்கியுள்ளன" என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, "ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையில் நடந்து கொண்டிருக்கும் போரில் இந்தியா அமைதியின் பக்கம் உள்ளது மற்றும் அனைத்து பிரச்சனைகளும் விவாதத்தின் மூலம் தீர்க்கப்படும் என்று நம்புகிறது. போரில் ஈடுபட்ட நாடுகளுடன் இந்தியாவுக்கு தொடர்பு உள்ளது - பொருளாதாரம், பாதுகாப்பு, கல்வி மற்றும் அரசியல் ரீதியாகவும். இந்தியாவின் பல தேவைகள் இந்த நாடுகளுடன் இணைக்கப்பட்டுள்ளன" என்றும் பிரதமர் மோடி பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT