Published : 10 Mar 2022 08:31 PM
Last Updated : 10 Mar 2022 08:31 PM
டேராடூன்: "மக்கள் மாற்றத்திற்காக வாக்களிப்பார்கள் என நம்பினோம். எங்களின் முயற்சியில் இடைவெளி இருந்திருக்கலாம். அதனை ஏற்றுக்கொண்டு தோல்விக்கு பொறுப்பேற்கிறேன்" என உத்தராகண்ட் முன்னாள் முதல்வர் ஹரிஷ் ராவத் தெரிவித்துள்ளார்.
உத்தராகண்ட மாநிலத்தில் உள்ள 70 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக கடந்த பிப்ரவரி 14-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. அதன் வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் பாஜக முன்னிலை வகித்து பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றும் நிலையில் உள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், உத்தராகண்டின் முன்னாள் முதல்வருமான ஹரிஷ் ராவத் கூறுகையில், "மக்கள் மாற்றத்திற்காக வாக்களிப்பார்கள் என்று நம்பினோம். எங்களுடைய பிரச்சாரம் மக்களின் மனங்களை வெல்லும்படியாக இல்லை. நாங்கள் இன்னும் அதிகமாக முயற்சித்திருக்க வேண்டும். இதனை ஏற்றுக்கொண்டு இந்த தோல்விக்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்.
என்னை இந்த ஒரு விஷயம் தான் ஆச்சரியபடுத்துகிறது... இத்தனை விலைவாசி உயர்வுக்குப் பின்பும் மக்களால் பாஜக ஜிந்தாபாத் என எப்படி சொல்ல முடிகிறது. இதுதான் மக்களின் மனநிலை என்றால், மக்கள் நலன் மற்றும் சமூகநீதிக்கான வரையறைதான் என்ன?” என்றவர், தொடர்ந்து ”என் மகள் உள்ளிட்ட வெற்றி பெற்றவர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துகள்" எனத் தெரிவித்தார்.
உத்தராகண்டில் ஆளும் பாஜக இரண்டாவது முறையாக மீண்டும் ஆட்சி அமைக்க இருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT