Published : 10 Mar 2022 03:38 PM
Last Updated : 10 Mar 2022 03:38 PM
புதுடெல்லி: பஞ்சாபில் தொங்குசபை ஏற்பட்டால் 'கிங் மேக்கர்' என எண்ணிய பாஜக இரண்டு தொகுதிகளில் முன்னணி வகிக்கிறது. இங்கு எதிர்க்கட்சியாக இருந்த ஆம் ஆத்மி கட்சி, முதன்முறையாக பெரும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது.
இதில், பஞ்சாப் மாநில பாஜக தலைவரான அஸ்வின் சர்மா, பத்தான்கோட் தொகுதியில் முன்னணி வகிக்கிறார். இக்கட்சியின் மற்றொரு முக்கியத் தலைவரான ஜங்கிலால் மஹாஜன், முக்கேரியன் தொகுதியில் முன்னணியில் உள்ளார். இதன் முடிவுகள் வெளியாவதற்கு நான்கு நாட்கள் முன்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பஞ்சாபில் ஆட்சி அமைப்பதில் பாஜக முக்கிய பங்கு வகிக்கும் எனக் கூறி இருந்தார். இதையே, அக்கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவும் வழிமொழிந்திருந்தார்.
ஆனால், கடந்த 2014 மக்களவை தேர்தலில் வீசத் துவங்கிய 'மோடி அலை' பஞ்சாபில் மட்டும் இன்றுவரை எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இது மீண்டும் இன்று வெளியான பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளில் நிரூபணமாகி உள்ளது. பஞ்சாபில் சிரோமணி அகாலி தளம் (எஸ்ஏடி) கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு வந்தது பாஜக. கடந்த வருடம் மத்திய அரசால் அமலான மூன்று வேளாண் சட்டத் திருத்த மசோதாக்களை எதிர்த்து பாஜகவிடமிருந்து விலகியது அகாலிதளம்.
இதன் காரணமாக வேறுவழியின்றி, இந்த சட்டப்பேரவை தேர்தலில் தனது கட்சி தலைமையில் புதிய கூட்டணி அமைத்தது பாஜக. இதனுடன், காங்கிரஸிலிருந்து வெளியேறிய முன்னாள் முதல்வர் கேப்டன் அம்ரீந்தர்சிங்கின் பஞ்சாப் லோக் காங்கிரஸ் (பிஎல்சி) மற்றும் சிரோமணி அகாலி தளத்தின் சம்யுக்த் பிரிவு கட்சிகளை சேர்த்தது.
இதன் சார்பில் பஞ்சாபின் நகர்ப்புற இந்து ஆதரவு வாக்குகளை பெற்று கணிசமானத் தொகுதிகளை பாஜக பெற முயன்றது. ஆனால், அக்கட்சிக்கு எதிர்பார்த்த அளவை விட மிகக்குறைவான தொகுதிகளாவது கிடைக்குமா? எனும் கேள்வி எழுந்துள்ளது.
குறிப்பாக, பாஜகவின் முக்கியக் கூட்டணியான பிஎல்சியின் தலைவர் கேப்டன் அம்ரீந்தர்சிங்குற்கே பாட்டியாலா நகர தொகுதியில் தோல்வி அடைந்துள்ளார். இவரை ஆம் ஆத்மி கட்சியின் அஜித் பால் சிங் கொஹிலி வெற்றி பெற்றுள்ளார். கடந்த 2017 தேர்தலில் இதே தொகுதியில் வெற்றி பெற்று அம்ரீந்தர் காங்கிரஸின் முதல்வராகி இருந்தார். இங்கு காங்கிரஸும் இணைந்து மும்முனைப்போட்டி நிலவி இருந்தது.
பாஜகவுடனான உறவை முறித்த அகாலிதளம் தனது தொகுதிகளை தக்க வைத்துக்கொள்ள முடியாமல் 4 தொகுதிகளில் மட்டும் முன்னணி வகிக்கின்றது. இந்தமுறை மாற்றத்தை விரும்பிய பஞ்சாபிகள் ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களித்து வெற்றியடையச் செய்துள்ளனர். பஞ்சாபில் 117 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சிக்கு 91 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.
ஆளும் காங்கிரஸ் வெறும் 17 தொகுதிகளில் முன்னணி வகிக்கின்றது. காங்கிரஸின் முதல்வர் சரண்ஜித்சிங் சன்னியுடன், அதன் முக்கியத் தலைவரான நவ்ஜோத்சிங் சித்துவிற்கும் தோல்வி கிடைத்துள்ளது. அகாலிதளம் கட்சியின் முன்னாள் முதல்வராக பிரகாஷ்சிங் பாதலுடன் அவரது மகனான முன்னாள் துணை முதல்வர் சிக்பீர்சிங் பாதலுக்கும் தோல்வி கிடைத்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...