Published : 10 Mar 2022 11:18 AM
Last Updated : 10 Mar 2022 11:18 AM

பிரியங்கா முயன்றும் பின்னடைவை சந்திக்கும் காங்கிரஸ்: பெரும் தோல்வி காணும் மாயாவதி

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி: கோப்பு படம்

லக்னோ: உத்தர பிரதேச தேர்தலில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி பெரும் தோல்வியை சந்திக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதுபோலவே பிரியங்கா காந்தி தீவிர பிரச்சாரம் செய்த நிலையிலும் காங்கிரஸ் பெரும் பின்னடைவை சந்திக்கும் சூழல் உள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் 403 தொகுதிகளுக்கு பிப்ரவரி 10-ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. உ.பி. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது.

உத்தரப் பிரதேசத்தில் ஆளும் பாஜக பெரும் வெற்றி பெரும் நிலையில் உள்ளது. பெரும்பான்மைக்கு தேவையான 203 இடங்களை கடந்து அக்கட்சி முன்னிலை பெற்றுள்ளது. இதன் மூலம் முதல்வர் யோகி ஆதித்யநாத் மீண்டும் முதல்வர் பதவியில் அமரும் சூழல் உள்ளது.

உ.பி.யில் சுதந்திரத்துக்கு பின்பு இதுவரை எந்த ஒரு முதல்வரும் 2-வது முறையாக முதல்வர் பதவியில் அமரவில்லை. இதனை முறியடித்து யோகி ஆதித்யநாத் தொடர்ந்து 2-ம் முறையாக முதல்வர் பதவி ஏற்கும் சூழல் உருவாகியுள்ளது.

முக்கிய எதிர்க்கட்சியான அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி அடுத்த இடத்தில் உள்ளது. எனினும் பாஜகவுக்கும் சமாஜ்வாதி கட்சிக்கும் இடையிலான வித்தியாசம் ஏறக்குறைய பாதியாக உள்ளது.

உ.பி. முன்னாள் முதல்வர் மாயாவதி

இதனைத் தவிர பகுஜன் சமாஜ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் பெரிய அளவில் முன்னிலை பெறவில்லை. கடந்த காலங்களில் உ.பி. தேர்தலில் பெரும் பங்கு வகித்த மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி இந்த தேர்தலில் பெரும் தோல்வியை தழுவியுள்ளது.

2017-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி 19 இடங்களை வென்ற நிலையில் இந்த தேர்தலில் 6 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. இதுபோலவே காங்கிரஸ் கட்சியும் இந்த தேர்தலில் பெரும் சரிவை நோக்கிச் செல்கிறது.

இந்த தேர்தலில் காங்கிரஸ் தேர்தல் பொறுப்பை அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஏற்று இருந்தார். தீவிர பிரச்சாரம் செய்தார். இதனால் காங்கிரஸ் தனது பழைய நிலையை மீட்டெடுக்குமா என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால் கடந்த முறை வென்ற தொகுதியைக் கூட கைபற்ற முடியாத சூழல் ஏற்படும் என தெரிகிறது. 2017-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் 7 இடங்களில் வென்ற காங்கிரஸ் இந்த தேர்தலில் 4 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x