Published : 05 Mar 2022 07:24 AM
Last Updated : 05 Mar 2022 07:24 AM
பெங்களூரு: உக்ரைனில் உயிரிழந்த கர்நாடக மாணவரின் சவப்பெட்டியை விமானத்தில் வைக்கும் இடத்தில் 10 பேர் அமர முடியும் என்று கர்நாடக பாஜக எம்எல்ஏ அரவிந்த் பெல்லட் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.
கர்நாடக மாநிலத்தின் ஹாவேரி பகுதியை சேர்ந்த மருத்துவக் கல்லூரி மாணவர் நவீன் (22) கடந்த செவ்வாய்க்கிழமை உக்ரைன் போரில் உயிரிழந்தார். உணவுப் பொருட்கள் வாங்க கடைக்கு சென்று வரிசையில் காத்திருந்த போது தாக்குதலில் அவர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாயின.
அவரது பெற்றோர் தங்களது மகனின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதைடுத்து கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, மாணவரின் பெற்றோருக்கு தொலைபேசி மூலம் ஆறுதல் கூறினார். அவரது உடலை அடையாளம் கண்டுள்ளதாகவும், விரைவில் உக்ரைனில் இருந்து அவரது உடலை இந்தியா கொண்டுவர நடவடிக்கை எடுத்து வருவதாகவும் உறுதியளித்தார்.
இந்த சூழலில் தார்வாட் தொகுதியின் பாஜக எம்எல்ஏ அரவிந்த் பெல்லட் கூறியதாவது: உயிரிழந்த நவீனின் உடலை கொண்டுவர மத்திய, மாநில அரசுகள் முயன்று வருகின்றன. உக்ரைனில் போர் நடந்து வருவதால் உடலை மீட்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. அங்கு உயிருடன் இருப்பவர்களை மீட்பதே மிகவும் சவாலாக இருக்கிறது. உயிரிழந்தவர்களை மீட்பது எவ்வளவு கடினம் என்பதை யோசித்து பார்க்க வேண்டும்.
உயிரிழந்த மாணவரின் சவப் பெட்டியை விமானத்தில் வைக்கும் இடத்தில் 10 பேர் வரை அமர முடியும். எனவே அந்த இடத்தை உயிருடன் இருப்பவர்களை மீட்க பயன்படுத்தலாம். போரில் சிக்கியவர்களை மீட்கவே முன்னுரிமை அளிக்க வேண்டும்.
இவ்வாறு பாஜக எம்எல்ஏ அரவிந்த் பெல்லட் தெரிவித்தார்.
இவரது கருத்துக்கு எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, மஜத மாநில தலைவர் குமாரசாமி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித் துள்ளனர்.
உயிரிழந்த மாணவர் நவீனின் தந்தை சேகரப்பா கூறும்போது, ‘‘எனது மகனுக்கு இந்தியாவில் மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால் உக்ரைனுக்கு படிக்க அனுப்பினோம். அவர் உயிரி ழந்ததால் நாங்கள் நொறுங்கி இருக்கிறோம். இந்த நிலையில் பாஜக எம்எல்ஏ அரவிந்த் பெல் லட்டின் பேச்சு கடும் கோபத்தை ஏற்படுத்துகிறது. பிள்ளையை இழந்த எங்கள் நிலையில் இருந்து அவர் யோசித்துப் பார்க்க வேண்டும். கடைசியாக எனது மகனின் முகத்தை பார்க்கும் வாய்ப்பை அரசு ஏற்படுத்தி தர வேண்டும்'' என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT