Last Updated : 04 Mar, 2022 04:33 PM

1  

Published : 04 Mar 2022 04:33 PM
Last Updated : 04 Mar 2022 04:33 PM

’வந்தால் செல்ல நாய்க்குட்டியுடன்தான் வருவேன்’ - சொன்னதைச் செய்து காட்டிய டேராடூன் மாணவர்!

இந்தியா திரும்பிய உக்ரைனில் படிக்கும் மாணவர் ரிஷப் கவுஷிக் ஏஎன்ஐக்கு பேட்டி.

புதுடெல்லி: உக்ரைனில் பொறியியல் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர், ’எனது செல்ல நாய்க்குட்டியுடன்தான் இந்தியா திரும்புவேன்’ என்று கூறிவந்த நிலையில், அவர் விருப்பப்படியே அனைத்து தடைகளையும் தகர்த்து தனது சொந்த ஊரான டேராடூனுக்கு செல்ல நாய்க்குட்டியுடன் வந்து சேர்ந்தார்.

உக்ரைனில் பொறியியல் மூன்றாம் ஆண்டு மாணவர் ரிஷப் கவுஷிக். இவர் தனது செல்ல நாய்க்குட்டி இல்லாமல் நாட்டை விட்டு வெளியேற மறுத்துவிட்டார். தனது செல்ல நாய்க்குட்டிக்கு அவர் வைத்துள்ள பெயர் மாலிபு. அதனையும் தன்னோடு அழைத்துக்கொண்டு இந்தியாவுக்கு வரவேண்டும் என்பதுதான் அவரது விருப்பம். அதற்கான அனைத்து சட்ட நடைமுறைகளையும் உரிய விதிமுறைகளையும் தான் பின்பற்றுவதாகவும் ஆவணங்களை சமர்ப்பித்துள்ளார். ஆனால், மேலும் மேலும் சில ஆவணங்கள் கோரப்பட்டு, அதிகாரிகளால் அவர் தொடர்ந்து அலைக்கழிக்கப்பட்டு வந்ததாக, அவர் சமீபத்தில் சமூக ஊடகங்களில் வெளிட்ட வீடியோ ஒன்றில் வருத்தத்தோடு பகிர்ந்துகொண்டார்.

கடந்த பிப்ரவரி 27-ல் விமானத்தில் ஏறி இந்தியா வரவிருந்த நிலையில், அவர் புதுடெல்லியில் உள்ள இந்திய அரசின் விலங்குத் தனிமைப்படுத்தல் மற்றும் சான்றிதழ் சேவை (AQCS) மற்றும் உக்ரைனில் உள்ள இந்தியத் தூதரகத்தை அணுகிய நிலையில், மறுமுனையிலிருந்து அதிகாரிகள் அவரை கன்னாபின்னவென்று திட்டியதாக புலம்பினார். பின்னர் ''இந்த மாலிபு நாய்க்குட்டி மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளது. எப்பொழுதும் அது அழுதுகொண்டிருக்கிறது. இந்திய அரசாங்க அதிகாரிகள், தயவுகூர்ந்து உங்களால் முடிந்தால், எங்களுக்கு உதவுங்கள். கீவ் நகரில் உள்ள இந்திய தூதரகம் கூட எங்களுக்கு உதவவில்லை. இதனால் மேற்கொண்டு எதுவும் செய்யமுடியாமல் தவிக்கிறோம்" என்று அவர் இந்திய அரசாங்கத்திடம் தனது முறையீட்டை முன்வைத்திருந்தார்.

இந்தியா திரும்பிய உக்ரைனில் படிக்கும் மாணவர் ரிஷப் கவுஷிக் ஏஎன்ஐக்கு பேட்டி.

தற்போது அவரது கோரிக்கைகள் ஏற்கப்பட்டு அவர் இன்று (வெள்ளிக்கிழமை) இந்தியா திரும்பிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து ஏஎன்ஐ வெளியிட்டுள்ள செய்தியில் ''டேராடூனைச் சேர்ந்த உக்ரைனில் படிக்கும் மாணவர் கவுசிக், இன்ஸ்டாகிராமில் தனது நாயை தன்னுடன் இந்தியாவிற்கு கொண்டு வருவதில் அவர் எதிர்கொள்ளும் சிரமங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு, NOC-ஐ அனுமதிக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தினார். தற்போது அவரது ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு ரிஷாப் கவுஷிக் மற்றும் அவரது நாய் மாலிபு உக்ரைனில் இருந்து புடாபெஸ்ட் (ஹங்கேரி) வழியாக வீடு திரும்பினர்'' என்று தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ரிஷப் கவுஷிக் அளித்த பேட்டியில், ''என்னுடைய செல்லப் பிராணியுடன் நான் இந்தியா வருவதற்கு இந்திய அரசாங்கத்திற்கு நிறைய ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டியிருந்தது. இதற்காக அரசாங்க நடைமுறை விதிகள் நீண்டுகொண்டே போனது. ஆனால், போர் போன்ற சூழ்நிலைகளில், அவர்கள் தங்கள் சொந்த குடிமக்களை இவ்வாறெல்லாமல் இழுத்தடிக்காமல் அனுமதித்திருக்க வேண்டும். அதனால்தான், முறையீடு செய்தேன். செல்லப் பிராணிகள் தனது இருப்பிடத்திலிருந்து வெளியேறக் கூட தடையில்லா சான்றிதழ் இல்லாமலேயே இப்போது அனுமதிக்கப்படுகிறது என்று சமீபத்தில் பின்னர் ஒரு குறிப்பாணை எனக்கு வந்தது'' என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x