Published : 04 Mar 2022 08:17 AM
Last Updated : 04 Mar 2022 08:17 AM

கார்கிவ் நகரில் இந்திய மாணவர்கள் பணயக் கைதியாக பிடிக்கப்படவில்லை: வெளியுறவு அமைச்சகம் விளக்கம்

புதுடெல்லி: உக்ரைன் நாட்டின் கார்கிவ் நகரில் இந்திய மாணவர்கள் எவரும் பணயக் கைதியாக பிடிக்கப்படவில்லை என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்திய மாணவர்கள் சிலரை உக்ரேனிய பாதுகாப்புப் படை யினர் பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்துள்ளனர் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அலுவலம் நேற்று தெரிவித்தது.

“இந்திய மாணவர்களை மனிதக் கேடயமாக உக்ரேனிய பாதுகாப்புப் படையினர் பயன்படுத்துகிறார்கள். எல்லா வழிகளிலும் அவர்கள் ரஷ்ய எல்லைக்கு செல்வதைத் தடுக்கிறார்கள்” என்றும் தெரிவித்தது.

ரஷ்ய அதிபர் புதினும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் நேற்று முன்தினம் மாலைதொலைபேசியில் கலந்துரையாடிய பிறகு இந்த தகவல் வெளியானது.

மற்றொரு நிகழ்வாக, இந்தியா, சீனா, பாகிஸ்தான் மற்றும் பிற நாட்டு அரசுகளுடன் உக்ரேனிய வெளியுறவு அமைச்சகம் அவசரமாக தொடர்பு கொண்டது. “கார்கிவ் மற்றும் சுமி நகரில் ஆயுதமேந்திய ரஷ்ய படையினர் உங்கள் நாட்டு மாணவர்களை பிடித்து வைத்துள்ளனர்” எனத் தெரிவித்தது.

இவ்விரு நாடுகளின் தகவல்களுக்கும் இந்திய வெளியுறவு அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது. உக்ரைனில் இந்திய மாணவர்கள் எவரும் பணயக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்ட சம்பவம் எதுவும் நிகழவில்லை என்று வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி நேற்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x