Published : 03 Mar 2022 08:31 PM
Last Updated : 03 Mar 2022 08:31 PM
ஆபரேஷன் கங்கா செயல்திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்கள் மூலம் உக்ரைனிலிருந்து 6,200-க்கும் அதிகமான இந்தியர்கள் திரும்பியுள்ளனர் என்றும், அடுத்த இரண்டு நாட்களில் 7,400-க்கும் அதிகமான இந்தியர்கள் வந்து சேர்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை திரும்ப அழைத்து வர 'ஆபரேஷன் கங்கா' என்ற பெயரில், மீட்பு நடவடிக்கைகளை இந்தியா பெருமளவில் மேற்கொண்டு வருகிறது.
இந்திய மாணவர்களை வெகு வேகமாக இந்தியாவிற்கு அழைத்துவர சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் ஒருங்கிணைப்புடன் வெளியுறவு அமைச்சகம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளது.
இந்த நடவடிக்கைகளுக்கு உதவி செய்யவும், மேற்பார்வையிடவும், உக்ரைனுக்கு அருகில் உள்ள நாடுகளுக்கு மத்திய அமைச்சர்கள் ஹர்தீப் சிங் பூரி, ஜோதிராதித்ய சிந்தியா, கிரண் ரிஜிஜூ, வி.கே.சிங் ஆகியோர் சென்றுள்ளனர்.
10 சிவில் விமானங்கள் மூலம் இன்று வந்து சேர்ந்த 2,185 பேர்களையும் சேர்த்து பிப்ரவரி 22 முதல் இன்றுவரை மொத்தம் 6,200-க்கும் அதிகமானோர் மீட்டு வரப்பட்டுள்ளனர்.
புக்காரெஸ்டிலிருந்து 5, புடாபெஸ்டிலிருந்து 2, கோசியிலிருந்து 1, ரிஸோசவிலிருந்து 2 சிவில் விமானங்கள் மூலமும், இவைதவிர இந்திய விமானப்படையின் 3 விமானங்களிலும் இந்தியர்கள் இன்று அழைத்து வரப்பட்டனர்.
அடுத்த இரண்டு நாட்களில், 7,400-க்கும் அதிகமானோர் சிறப்பு விமானங்கள் மூலம் அழைத்துவரப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களில் 3,500 பேரை நாளையும் (மார்ச் 4), 3,900 பேரை நாளை மறுநாளும் (மார்ச் 5) அழைத்துவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT