Published : 03 Mar 2022 06:36 PM
Last Updated : 03 Mar 2022 06:36 PM
புதுடெல்லி: உக்ரைனில் இருந்து நாடு திரும்புவதற்குப் புறப்பட்ட பஞ்சாப் மாணவர் ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால், வினிஸ்தியா நகர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனின்றி அவரது உயிர் பிரிந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைனில் நிகழும் ரஷ்யப் போரால் அங்குள்ள வெளிநாட்டினர் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிட்டது. இதற்காக மத்திய அரசால் 'ஆப்ரேஷன் கங்கா' எனும் பெயரில் விமானங்களில் மீட்கப்படும் மாணவர்கள் டெல்லிக்கு வந்து சேருகின்றனர். தாயகம் திரும்புவதற்காக உக்ரைனின் எல்லையில் உள்ள ஐரோப்பிய நாடுகளான ஹங்கேரி, போலாந்து, செக்கஸ்லேவேகியா மற்றும் ருமேனியாவிற்கு மாணவர்கள் செல்கின்றனர். இங்கு சென்று சேர்வதற்காக வினிஸ்தியாவிலிருந்து இரண்டு தினங்களுக்கு முன் கிளம்பிய பின், அச்சமுறும் சூழலால் பஞ்சாபின் சந்தன் ஜிண்டலுக்கு (22) மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இவர், வினிஸ்தியாவின் தேசிய பைரோகோவ் மருத்துவப் பல்கலைகழகத்தின் மாணவர். இவரை அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்தார். இதில், சிகிச்சை பலனின்றி ஜிண்டலின் உயிர் பிரிந்துள்ளது. இவரது உடலை பஞ்சாபிற்கு அனுப்பி வைக்கும் பணிகள் நடைபெறுகின்றன.
உ.பி.யைச் சேர்ந்த 200 மாணவர்கள்: உக்ரைனில் பயிலும் இந்திய மாணவர்களில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களும் இடம்பெற்றுள்ளனர். இவர்களை மீட்கும் பணிக்காக உத்தரப் பிரதேச மாநில அரசால் மீட்பு சிறப்பு ஆணையராக ரன்வீர் பிரசாத் நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்து ஆணையர் ரன்வீர் பிரசாத் கூறும்போது, ''டெல்லியிலிருந்து 400 கி.மீ தொலைவிற்கும் அதிகமாக வீடுகள் கொண்டவர்களை விமானங்களில் அனுப்பி வைக்கப்படுகின்றனர். குறைந்த தொலைவு உள்ளவர்கள் வாகனங்களில் அனுப்பப்படுகின்றனர். இந்த வகையில், மீட்கப்பட்ட வாரணாசி, கோரக்பூர் உள்ளிட்ட சில நகரங்களை சேர்ந்த 46 மாணவர்கள் நேரடியாக விமானங்களில் சென்றனர். மீதம் உள்ள சுமார் 160 மாணவர்கள், அரசால் அமர்த்தப்பட்ட வாகனங்களில் தம் வீடுகளுக்கு வந்து சேர்ந்தனர்'' எனத் தெரிவித்தார்.
செல்லப் பிராணிகளுடன் திரும்பிய மாணவர்கள்: உக்ரைனில் பயிலும் இந்திய மாணவர்களில் சிலர் தாங்கள் அங்கு வளர்த்து வந்த செல்லப் பிராணிகளுடன் வீடு திரும்பியுள்ளனர். நாய், பூனைகளுடன் வந்த மாணவர்கள் இன்று காஜியாபாத்திற்கு வந்த இந்திய விமானப்படையின் போர் விமானங்களில் இறங்கினர். மகராஷ்டிராவின் புனேவைச் சேர்ந்த மருத்துவ மாணவி யுக்தா, தனது செல்ல நாயுடன் இந்தியா திரும்பியுள்ளார். மற்றொரு மாணவியான நீலா தனது பூனைக்குட்டியுடன் போர் விமானத்தில் பத்திரமாக வந்துள்ளார். இவர்கள் போல் அன்றி சில மாணவர்கள் தங்கள் நண்பர்களின் செல்லப் பிராணிகளையும் தம்முடன் கொண்டு வந்துள்ளனர். இதில் ஒரு உத்தரப் பிரதேச மாணவரான ஜஹீத் தனது நண்பரின் நாய்க்குட்டியுடன் காஜியாபாத் விமான நிலையத்தில் இன்று இறங்கவுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT