Published : 03 Mar 2022 06:56 AM
Last Updated : 03 Mar 2022 06:56 AM
புதுடெல்லி: உத்தர பிரதேச சட்டப்பேரவையின் 57 தொகுதிகளில் இன்று வாக்குப் பதிவு நடைபெறுகிறது. கடைசி 2 கட்ட தேர்தலில் ஜாதி, மத அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
உ.பி.யில் பிப்ரவரி 10-ம் தேதி தொடங்கி 7 கட்ட தேர்தல் நடைபெறுகிறது. ஆளும் பாஜக மீண்டும் ஆட்சியை தக்க வைக்க தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது. அதேநேரத்தில் முக்கிய எதிர்க்கட்சியாக முன்னாள் முதல்வர் அகிலேஷ் தலைமையில் சமாஜ்வாதி திகழ்கிறது. தவிர மாயாவதி தலைமையில் பகுஜன், காங்கிரஸ் கட்சிகளும் களத்தில் உள்ளன.
இந்நிலையில், 6-வது கட்டமாக 10 மாவட்டங்களில் உள்ள 11 தனித்தொகுதிகள் உட்பட 57 தொகுதிகளுக்கு இன்று வாக்குப் பதிவு நடைபெறுகிறது. கடைசி கட்ட தேர்தல் மார்ச் 7-ம் தேதி 9 மாவட்டங்களில் உள்ள 54 தொகுதிகளில் நடைபெறுகிறது. இவற்றில் கோரக்பூர், ஆசம்கர், மாவ், காஸிபூர், வாரணாசி, பதோஹி, பலியா, பஸ்தி, ஜோன்பூர் மற்றும் தியோரியா ஆகிய 10 மாவட்டங்கள் முஸ்லிம்கள் அதிகமுள்ள தொகுதிகளாகும். இதனால், இங்கு மதவாத அரசியல் முன்னிறுத்தப்படுகிறது.
மீதம் உள்ள அம்பேத்கர் நகர், பல்ராம்பூர், மகராஜ் நகர், சந்த் கபீர் நகர், குஷி நகர், சண்டவுலி மிர்சாபூர், சோன்பத்ரா மற்றும் சித்தார்த் நகர் ஆகிய 10 மாவட்டங்களில் தலித் வாக்காளர்கள் அதிகம். இந்தப் பகுதிகளில் குர்மி, நிஷாத், ராஜ்பர் உள்ளிட்ட இதர பிற்படுத்தப்பட்டவர்களும் அதிகம் வசிக்கின்றனர். எனவே, இந்த மாவட்டங்களில் உள்ள தொகுதிகளில் ஜாதி அரசியலுக்கு முக்கியத்துவம் தந்து, பாஜக மற்றும் சமாஜ்வாதி கூட்டணிக் கட்சிகள் களமிறங்கி உள்ளன.
இன்றைய வாக்குப் பதிவில் பாஜக ஆளும் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் அவரது 7 அமைச்சர்களின் வெற்றி, தோல்வி நிர்ணயிக்கப்பட உள்ளது. முதல்வர் ஆதித்யநாத்தை கோரக்பூர் நகர தொகுதியில் எதிர்க்கட்சியைச் சேர்ந்த சந்திரசேகர் ஆஸாத் முக்கிய வேட்பாளராக எதிர்க்கிறார்.
குஷி நகர் மாவட்ட பஜீல் நகரின் தொகுதியில் சமாஜ்வாதி வேட்பாளராக சுவாமி பிரசாத் மவுரியா உள்ளார். இவர் பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதியின் வலதுகரமாக கருதப்பட்டவர். பின்னர் 2017 தேர்தலில் பாஜக.வில் இணைந்து கேபினட் அமைச்சரானார். பிறகு இந்த தேர்தலில் சமாஜ்வாதியில் இணைந்தார் சுவாமி பிரசாத். குர்மி சமூகத்தை சேர்ந்த மவுரியாவின் மகள் சங்கமித்ரா, பாஜக எம்.பி.யாக இருந்து தன் தந்தைக்கு வாக்கு சேகரித்தது சர்ச்சையானது.
கடைசியாக நடைபெறும் 7-வது கட்ட வாக்குப் பதிவில் பிரதமர் நரேந்திர மோடியின் மக்களவை தொகுதியான வாரணாசி உள்ளது. முதல் கட்ட தேர்தல் நடைபெற்ற 57 தொகுதிகளில் 46 தொகுதிகளை 2017-ல் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கைவசப்படுத்தின. கடைசி கட்டத்தில், காஸிபூர் மாவட்டத்தின் ஜஹூராபாத் தொகுதியில் சமாஜ்வாதியின் முக்கிய கூட்டணிக் கட்சியான சுஹல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி தலைவர் ஓம் பிரகாஷ் ராஜ்பர் போட்டியிடுகிறார்.
இந்த 2 கட்ட தேர்தலுக்கான தொகுதிகளில் குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்களும் அதிக எண்ணிக்கையில் உள்ள னர். இவர்களுடைய ரூ.1,848 கோடி மதிப்புள்ள சட்டவிரோத சொத்துகள் பறிமுதல் செய்யப் பட்டுள்ளன. இவர்களது சட்ட விரோத கட்டிடங்கள் புல்டோசர் மூலம் இடிக்கப்பட்டன. இதனால், ‘புல்டோசர் பாபா’ என்றும் முதல்வர் ஆதித்யநாத்தை அழைக் கின்றனர். சட்டவிரோதமாக செயல் பட்டவர்களை உ.பி.யில் ஒடுக்கியது குறித்து இவர்களை உதாரணம் காட்டி ஆதித்யநாத் பிரச்சாரம் செய்கிறார். உ.பி.யின் 403 தொகுதிகளுக்கான தேர்தல் முடிவுகள் மார்ச் 10-ம் தேதி வெளியாகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT