Last Updated : 02 Mar, 2022 08:18 AM

 

Published : 02 Mar 2022 08:18 AM
Last Updated : 02 Mar 2022 08:18 AM

4 விமானங்களில் பாதுகாப்பாக 44 தமிழக மாணவர் உட்பட 434 பேர் இந்தியா வந்தனர்: திகில் அனுபவங்களை பகிர்ந்து கொண்ட மாணவர்கள்

ருமேனியாவின் புகாரெஸ்ட் நகரிலிருந்து நேற்று மும்பை வந்தடைந்த விமானத்தில் வந்திறங்கிய இந்தியர்கள்.படம்: பிடிஐ

புதுடெல்லி: தமிழக மாணவர்கள் 44 பேர் உட்பட 434 இந்தியர்கள் நேற்று 4 விமானங்களில் பத்திரமாக டெல்லி மற்றும் மும்பைக்கு வந்து சேர்ந்தனர். இவர்கள் தங்கள் திகில் அனுபவங்களை ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் பகிர்ந்து கொண்டனர்.

மத்திய அரசின் ‘மிஷன் கங்கா’ மீட்பு திட்டத்தின் கீழ் உக்ரைனில் சிக்கிய இந்தியர்கள், சிறப்பு விமானங்கள் மூலம் இந்தியா வந்தவண்ணம் உள்ளனர். ருமேனியா, ஹங்கேரி மற்றும் போலந்தில் இருந்து நேற்று வரை 9 விமானங்கள் இந்தியர்களுடன் டெல்லி திரும்பியுள்ளன.

ருமேனியாவின் புகாரெஸ்ட் நகரிலிருந்து நேற்று முதல் விமானம்காலையில் மும்பை வந்தது. இதில் ஒரெயோரு தமிழக மாணவர் உட்பட 182 பேர் இடம்பெற்றிருந்தனர். இதையடுத்து டெல்லிக்கு மதியம் 1.45 மற்றும் 2.15 மணிக்கு இரண்டு விமானங்கள் வந்தன. இதில் முதல் விமானத்தில் இருவர், இரண்டாவது விமானத்தில் 41 பேர் என மொத்தம் 43 தமிழக மாணவர்களும் நாடு திரும்பினர்.

இவர்கள் தங்களின் அனுபவங்களை ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் பகிர்ந்து கொண்டனர்.

லிவி தேசிய அரசு மருத்துவப் பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு பயிலும் சென்னை அண்ணாநகரின் கிரீஷ் தமிழழகன் கூறும்போது, “போர் மூண்டது முதல் எங்கள் பகுதியில் பிரச்சினை இல்லை. போலந்து அருகில் எங்கள் நகர் இருப்பதால், எங்கள் நகர் வழியாக தப்பிக்க ஏராளமானோர் குவியத் தொடங்கியதால், கடும் போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட பல பிரச்சினைகள் ஏற்பட்டன. தமிழக மாணவர்கள் சிலர் சுமார் 30 கி.மீ. தொலைவுக்கு நாள் முழுக்க நடந்தே போலந்து சென்றனர். அங்கு திடீரென உக்ரைன்வாசிகளுக்கு மட்டுமே அனுமதி எனக்கூறி வெளிநாட்டினரை திருப்பி விட்டனர்.இதனால், அவர்கள் அனைவரும் ஹங்கேரி எல்லைக்கு வந்து இந்திய விமானங்களுக்காக காத்திருக்கின்றனர்.

தற்போது இந்திய அரசின் தலையீட்டால் நிலைமை மாறியதாகதகவல் கிடைத்தது. நாங்கள் நேரடியாக மெட்ரோ ரயில் மூலம் ஹங்கேரி வந்து புத்தபெஸ்ட் விமானநிலையத்திலிருந்து கிளம்பி வந்தோம். உக்ரைனில் இருந்து வரும்அனைவரையும் அகதிகளாகக் கருதி ஹங்கேரியில் ரயில், பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்க அனுமதிக்கப்படுகிறது. இந்திய அரசுஅதிகாரிகளை சந்தித்த பின்அனைத்து வசதிகளும் பிரச்சினையில்லாமல் கிடைத்தன” என்றார்.

டெல்லி வந்துசேரும் தமிழக மாணவர்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்ப அனைத்து ஏற்பாடுகளை செய்யும்படி, டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்ல அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

நேற்று டெல்லி வந்த தமிழக மாணவர்களை, தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், உள்ளுறை ஆணையர் அதுல்யமிஸ்ரா ஆகியோர் விமான நிலையத்தில் காத்திருந்து வரவேற்று, உணவளித்து உபசரித்தனர்.

டெல்லி வந்த குழுவிலிருந்த வினிச்சியா தேசிய அரசு மருத்துவப் பல்கலைக்கழகத்தின் இரண்டாம் ஆண்டு மாணவியான அனுவர்ஷினி கணேஷ், கூறும்போது, “தாய்நாடு திரும்புமாறு இந்தியர்கள் அனைவருக்கும் அங்குள்ள இந்திய தூதரகத்தால் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், உக்ரைன் அரசு, ரஷ்யாவின் உக்கிரமான தாக்குதலை எதிர்பார்க்கவில்லை. எங்கள் பல்கலைக்கழக நிர்வாகம் பாதுகாப்பு அளிப்பதாக உறுதியளித்து, வகுப்புகளை தொடர்ந்து நடத்தியதால் நாங்கள் அங்கேயே இருந்தோம். வகுப்புகளை புறக்கணித்தால் அதிகமான தொகை அபராதமாக செலுத்த வேண்டியிருக்கும். போர் துவங்கிய பிறகு தலைநகரான கீவும் தாக்குதலுக்கு உள்ளானதால் எங்களுக்கு அங்கிருந்து கிளம்புவதை தவிர வேறுவழி இல்லாமல் போனது” என்றார்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த இவர்கள் சென்னை, கோவை மற்றும் திருவனந்தபுரம் விமானங்களில் அடுத்தடுத்து அனுப்பி வைக்கப்பட்டனர். இதுவரை 2012 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இவர்களில் 83 பேர் தமிழக மாணவர்கள் ஆவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x