Published : 28 Feb 2022 04:15 PM
Last Updated : 28 Feb 2022 04:15 PM

கரோனா பரிசோதனை முடிவு, தடுப்பூசி, தனிமைப்படுத்துதல்: உக்ரைன் மாணவர்களுக்கு விலக்கு

புதுடெல்லி: உக்ரைனில் இருந்து வரும் பயணிகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் பல்வேறு விலக்கு அளித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:

உக்ரைனில் சிக்கியிருக்கும் இந்தியர்களை மத்திய அரசு மீட்டு வருகிறது. உக்ரைனில் இருந்து இந்தியர்களை மீட்பதற்கு வெளியுறவு அமைச்சகம், சிவில் விமானப்போக்குவரத்து அமைச்சகம், உள்துறை அமைச்சகம், சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் ஆகியவை ஒருங்கிணைந்து அனைத்து உதவிகளையும் செய்து வருகின்றன.

வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் பயணிகளுக்கு கட்டாயமாக்கப்பட்டிருந்த விதிமுறைகளை மனிதாபிமான அடிப்படையில் உக்ரைனில் இருந்து வரும் பயணிகளுக்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் திருத்தி அமைத்துள்ளது.

உக்ரைன் நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்தால் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் குறிப்பாக மாணவர்கள் சிக்கி தவிக்கின்றனர். உக்ரைனிலிருந்து விமானங்கள் வர அனுமதிக்கப்படாததால் போலந்து, ருமேனியா, ஸ்லோவாக்கியா, ஹங்கேரி ஆகிய நாடுகள் உக்ரைனில் உள்ள இந்தியர்களை வெளியேற்ற ஏற்பாடுகளை செய்துள்ளன. பின்னர் ஆபரேஷன் கங்கா விமானங்கள் என்ற திட்டத்தின் கீழ் அந்தந்த நாடுகளில் இருந்து இவர்கள் இந்தியாவுக்கு அனுப்பப்படுகின்றனர்.

இன்று பிற்பகல் நிலவரப்படி உக்ரைனில் இருந்து 1,156 பயணிகளை ஏற்றிக்கொண்டு 5 விமானங்கள் (மும்பையில் ஒன்று, டெல்லியில் நான்கு) வந்துள்ளன. இந்த பயணிகளில் இதுவரை எவரும் தனிமைப்படுத்தி வைக்கப்படவில்லை.

இந்தியாவுக்கு வருவதற்கு முன் ஏர்-சுவிதா இணையப் பக்கத்தில் விமானப் பயணத்திற்கு முன் தொற்றின்மைக்கான பரிசோதனை அறிக்கை அல்லது முழுமையாக தடுப்பூசி செலுத்தியிருப்பதற்கான சான்றிதழ் ஆகியவற்றைக் கட்டாயம் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்பதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

பிரதிநிதித்துவப் படம்

கோவிட்-19 தடுப்பூசி செலுத்தியிருப்பவர்கள் இந்தியாவில் விமான நிலையத்திற்கு வந்தபின் அடுத்த 14 நாட்களுக்கு தங்களின் உடல்நிலையை அவர்களே கண்காணித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டு, வெளியேற அனுமதிக்கப்படுவார்கள்.

இந்தியாவிற்கு வருவதற்கு முன் ஆர்டிபிசிஆர் பரிசோதனை அறிக்கையை ஒரு பயணி அளிக்காமல் அல்லது கோவிட் தடுப்பூசி செலுத்திக்கொள்வதை முழுமையாக நிறைவு செய்யாமல் வரும் போது அவர்கள் தங்களின் ரத்த மாதிரிகளை சமர்ப்பிக்க அனுமதிக்கப்படுவார்கள். அதே சமயம் 14 நாட்களுக்கு தங்களை தாங்களே கண்காணித்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்படுவார்கள்.

பரிசோதனையில் தொற்று இருப்பது கண்டறியப்பட்டால் அவர்களுக்கு விதிமுறைகளின்படி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படும்.

இவ்வாறு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x