Published : 28 Feb 2022 07:24 AM
Last Updated : 28 Feb 2022 07:24 AM
உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க ‘ஆபரேஷன் கங்கா’ என்ற பெயரில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு சாலை மார்க்கமாக இந்தியர்கள் வரவழைக்கப்பட்டு, அங்கிருந்து விமானங்கள் மூலம் அவர்கள் தாயகம் அழைத்து வரப்படுகின்றனர். மாணவர்களுக்கான பயணச் செலவை மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது.
இந்தச் சூழலில் இந்திய மாணவர்களை மீட்பது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நேற்று அவசர ஆலோசனைக் கூட்டம்நடந்தது. இதில் பங்கேற்ற மத்திய வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷிரிங்லா, உக்ரைனில் இருந்து இந்தியமாணவர்களை மீட்க எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைகளை விவரித்தார். மாணவர்களை விரைந்து மீட்க நடவடிக்கை எடுக்குமாறு வெளியுறவுத் துறை அதிகாரிகளுக்கு பிரதமர் உத்தரவிட்டார்.
மாணவர்களுக்கு அறிவுரை: உக்ரைனில் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். அந்த நாட்டின் பல்வேறு பகுதிகளில் தவிக்கும் அவர்கள் அண்டை நாடுகளான ருமேனியா, ஹங்கேரி, போலந்து வழியாக மீட்கப்பட்டு வருகின்றனர். உக்ரைன் தலைநகர் கீவில் செயல்படும் இந்திய தூதரகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
உக்ரைனில் தவிக்கும் இந்தியர்கள், ருமேனியா, ஹங்கேரி வாயிலாக மீட்கப்பட்டு வருகின்றனர். தற்போது போர் தீவிரமடைந்துள்ளதால் இந்திய மாணவர்கள் அவரவர் தங்கியுள்ள இடத்தை விட்டுவெளியே வரக்கூடாது. பொதுவெளியில் நடமாடக் கூடாது. இந்தியர்களுக்காக உக்ரைன் அரசு இலவச ரயில்சேவைகளை இயக்க உறுதி அளித்துள்ளது.
இதுகுறித்த தகவல்களை உக்ரைனின் டெலிகிராம் சேனல்களை பார்த்து தெரிந்துகொள்ளலாம். எந்த இடத்துக்கு சென்றாலும் இந்திய மாணவர்கள் தனியாக செல்லவேண்டாம். குழுக்களாக செல்ல வேண்டும். ரயில் பயணத்தில் குழந்தைகள், பெண்கள், முதியோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT