Published : 26 Feb 2022 06:13 AM
Last Updated : 26 Feb 2022 06:13 AM

உக்ரைனில் தவிக்கும் இந்தியர்களை பாதுகாக்க உத்தரவிடப்படும்: பிரதமர் மோடியிடம் ரஷ்ய அதிபர் புதின் உறுதி

புதுடெல்லி: உக்ரைனில் தவிக்கும் இந்தியர்களை பாதுகாக்க தேவையான உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உறுதி அளித்துள்ளார்.

உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யா, அந்த நாட்டின் தலைநகர் கீவ் உட்பட பெரும்பான்மை பகுதிகளை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளது. உக்ரைனில் சுமார் 24,000 இந்தியர்கள் உள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் மாணவ, மாணவியர் ஆவர். தலைநகர் கீவ் உட்பட பல்வேறு நகரங்களில் அமைந்துள்ள ராணுவ தளங்களை குறிவைத்து ரஷ்ய போர் விமானங்கள் குண்டுமழை பொழிந்து வருகின்றன.

குண்டுவீச்சு, ஏவுகணை தாக்குதல் களில் இருந்து தப்பிக்க இந்திய மாணவ,மாணவியர் மெட்ரோ ரயில் நிலையங்கள், பதுங்கு குழிகளில் தஞ்சமடைந்துள்ளனர். விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில் வான் வழியாக அவர்களை மீட்க முடியாத சூழல் நீடிக்கிறது. எனவே உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு சாலை மார்க்கமாக இந்தியர்களை வரவழைத்து அங்கிருந்து விமானங்கள் மூலம் இந்தியாவுக்கு அழைத்து வர மத்திய அரசு ஏற்பாடுகளை செய்து வருகிறது.

இந்த சூழலில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் தொலைபேசியில் பேசினார். இதுகுறித்து ரஷ்ய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது:

உக்ரைனின் டான்பாஸில் வசிக்கும் மக்களுக்கு எதிராக அந்த நாட்டு ராணுவம் கொடூர தாக்குதல்களை நடத்தியது. மின்ஸ்க் ஒப்பந்தத்தை அமல்படுத்தாமல் மக்களை அழிக்கும் கொள்கையை கடைப்பிடித்தது. மேலும் உக்ரைனில் அமெரிக்கா, நேட்டோ படைகளை குவிக்கவும் அந்த நாட்டு அரசு முயற்சி செய்தது. இதை ஏற்றுக் கொள்ள முடியாது. இதன்காரணமாகவே உக்ரைன் மீது சிறப்பு ராணுவ நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ரஷ்யாவின் நிலைப்பாட்டை அதிபர் புதின், பிரதமர் நரேந்திர மோடியிடம் எடுத்துரைத்தார். உக்ரைனில் தங்கியுள்ள இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டார். இதுதொடர்பாக ரஷ்ய படைகளுக்கு தேவையான உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என்று அதிபர் புதின் உறுதி அளித்தார். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: உக்ரைனின் தற்போதைய நிலவரம் குறித்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பிரதமர் நரேந்திர மோடியிடம் விவரித்தார். உக்ரைன் விவகாரத்தில் அனைத்து தரப்பினரும் வன்முறையை கைவிட்டு அமைதி பேச்சுவார்த்தை பாதைக்கு திரும்ப வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.

மேலும் ரஷ்யாவுக்கும் நேட்டோவுக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x