Published : 24 Feb 2022 09:18 AM
Last Updated : 24 Feb 2022 09:18 AM
பெங்களூரு: ஹிஜாப் விவகாரத்தில் சிஎப்ஐ அமைப்பினர் தலையிட்ட பிறகே முஸ்லிம் மாணவிகள் கல்லூரியில் போராட தொடங்கினர் என்று உடுப்பி கல்லூரி தரப்பு கர் நாடகஉயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
கர்நாடக கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டதற்கு எதிராக உடுப்பி முஸ்லிம் மாணவிகள் போராட்டம் நடத்தினர். இதனை கண்டித்து நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதனிடையே முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் தடைக்கு எதிராக கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இவ்வழக்கு தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஷ்தி, நீதிபதிகள் ஜே.எம்.காஷி, கிருஷ்ணா தீட்ஷித் ஆகியோர் அடங்கிய அமர்வுமுன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது உடுப்பி பி.யு.கல்லூரி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் எஸ்.எஸ்.நாகனந்த் வாதிட்டதாவது: சம்பந்தப்பட்ட கல்லூரியில் 2004-ம் ஆண்டுமுதல் சீருடை விதிகள் கட்டாயமாக்கப்பட்டன. கடந்த டிசம்பர் மாதம்வரை வகுப்பறைக்குள் எந்தமாணவியும் ஹிஜாப் அணிந்து வரவில்லை. கல்லூரி நிகழ்வுகளில் ஹிஜாப் அணியாமல் பங்கேற்றுள்ளனர். 70-க்கும் மேற்பட்ட முஸ்லிம் மாணவிகள் படிக்கும் அந்த கல்லூரியில் 6 மாணவிகள் மட்டும் ஹிஜாப் அணிந்துவர அனுமதி கேட்டனர்.
அதற்கு மறுப்பு தெரிவித்ததால் கேம்பஸ் பிரண்ட் ஆப் இந்தியா (சிஎப்ஐ) அமைப்பினரிடம் முறையிட்டனர். அந்த அமைப் பினர் கல்லூரி நிர்வாகத்திடம், ஆசி ரியர்களிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் கல்லூரி மேம்பாட்டு குழு, உடுப்பி ஆட்சியர், அதிகாரிகளுடன் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு எட்டப்படாததால் கடந்த ஜனவரியில் போராட்டத்தை தீவிரமாக முன்னெடுத்தனர்.
மாணவிகளின் போராட்டத்தின் பின்னணியில் சிஎப்ஐ அமைப் பினர் இருந்துள்ளனர். அவர்கள் தலையிடுவதற்கு முன்பு எந்த போராட்டமும் நடக்கவில்லை. இந்த சிஎப்ஐ அமைப்பானது மாணவர் அமைப்பு என சொல்லப்பட்டாலும் எந்த கல்வி நிறுவனத்தாலும் அங்கீகரிக்கப்பட்ட அமைப்பு அல்ல. தீவிர கருத்துக்களைக் கொண்ட அந்த அமைப்பினர் பல இடங்களில் குழப்பங்களை ஏற்படுத்தி மாணவிகளையும் பெற்றோரையும் தூண்டி விட்டுள்ள னர். இவ்வாறு வழக்கறிஞர் எஸ்.எஸ்.நாகனந்த் வாதாடினார்.
அதற்கு தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஷ்தி, “இது புதிய தகவலாக இருக்கிறது. இந்த தகவலை அரசு ஏன் முன்கூட்டியே நீதிமன்றத்தில் தெரிவிக்கவில்லை. இந்த அமைப்பு பற்றிய உளவுத் துறை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுங்கள்'' என்று உத்தரவிட்டார். அதற்கு அரசின் தலைமை வழக்கறிஞர் பிரபுலிங் நவத்கி, “இது உணர்வுப்பூர்வமாக அணுக வேண்டிய விஷயம். உளவுத்துறையின் அறிக்கையை சீல் இடப்பட்ட கவரில் விரைவில் தாக்கல் செய்கிறோம்''என்றார்.
வழக்கின் விசாரணை வியாழக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT